அணுக்கரு இணைவு தொடர்பான செயல்முறையின் நீண்ட கால தேடலில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாக, ஐரோப்பிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அணுக்கரு இணைவு என்பது நட்சத்திர உருவாக்கத்தின்போது நடக்கும் ஒரு நிலை. இந்த நிலையின்போது அதிகளவிலான ஆற்றல் கிடைக்கிறது.
இரு ஹைட்ரஜன் அணுக்கருவை ஒன்றாக இணைக்கும்போது வெளியாகும் ஆற்றலின் அளவில், பிரிட்டனின் ஜெட் லேபரேட்டரி தன்னுடைய சொந்த உலக சாதனையை முறியடித்துள்ளது.
அணுக்கரு இணைவு பூமியில் வெற்றிகரமாக மீளுருவாக்கம் செய்யப்பட்டால், குறைந்தளவிலான கார்பன் டை-ஆக்சைடு, கதிரியக்க உமிழ்வை கொண்டுள்ள எல்லையற்ற ஆற்றல் உருவாகும் சாத்தியம் ஏற்படும்.
இந்த சோதனையில் 5 நொடிகளில் 59 மெகாஜூல்ஸ் (11 மெகாவாட் மின்சக்தி) அளவிலான ஆற்றல் உருவானது.
இது கடந்த 1997-ல் இதேமாதிரியிலான சோதனையில் உருவான ஆற்றலை விட இருமடங்காகும்.
இந்த சோதனை வெற்றியடைந்தால், எதிர்காலத்தில் பக்கவிளைவுகள் இல்லாத, காலநிலை நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையிலான ஆற்றல் மூலம் மின்சக்தி பயன்பாட்டை உருவாக்கலாம் என்பதால், இந்த சாதனை முக்கியமானதாக கருதப்படுகிறது.