மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம், விலை மனுக் கோரல் இன்றி, இந்தியாவிற்கு சொந்தமான அதானி நிறுவனத்திற்கு கையளிக்கப்பட்டமை, தற்போது பேசுப் பொருளாக மாறியுள்ளது.
பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக் குழு (கோப் குழு) முன்னிலையில் இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ.பெர்டினான்டோ வெளியிட்ட கருத்து, இன்று பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் விடுக்கப்பட்ட அழுத்தத்திற்கு மத்தியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த திட்டத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்குமாறு கூறியதாக மின்சார சபையின் தலைவர் கூறியிருந்தார்.
மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை எவ்வாறு இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதன்போது கேள்வி எழுப்பியிருந்தார்.
”இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு திட்டம் வழங்கப்பட்டது எவ்வாறு?. இந்தியா அரசாங்கத்தினால் இது தொடர்பிலான அறிக்கை இருக்கின்றதா? எமது பிரதிநிதி இவர் என இந்தியா கோரிக்கை இருக்கின்றதா?” என பாட்டலி சம்பிக்க ரணவக்க கேள்வி எழுப்பினார்.