September 26, 2023 8:45 pm
adcode

அம்பானி Vs அதானி: ஆசிய பெரும் கோடீஸ்வரர் பட்டியலில் போட்டி போடும் கெளதம் அதானியின் கதை

இது நடந்தது 1978இல். ஒரு இளம் கல்லூரி மாணவர் தான் படிக்கும் காலத்தில் ஒரு பெரிய கனவு கண்டார். ஒருநாள் திடீரென கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டார்.

இப்போது அந்த இளைஞர் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராகிவிட்டார்.

பிப்ரவரி 8ஆம் தேதி 88.5 பில்லியன் டாலர்கள் மொத்த சொத்து மதிப்பை எட்டிய கௌதம் அதானியின் கதைதான் இது.

அன்றைய தினம் ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் பட்டியலில், கௌதம் அதானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியை முந்தினார். முகேஷின் அன்றைய சொத்து மதிப்பு 87.9 பில்லியன் டாலர்கள் ஆகும். இருப்பினும், இதற்கு ஒரு நாள் கழித்து, அம்பானி மீண்டும் அவரை பின்னுக்கு தள்ளிவிட்டார்.

பிப்ரவரி 9ஆம் தேதியன்று, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 89.2 பில்லியன் டாலர்களாகவும் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 86.3 பில்லியன் டாலர்களாகவும் இருந்தன.

வீட்டு சமையல் பொருட்கள் முதல் நிலக்கரி சுரங்கங்கள், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள் முதல் மின் உற்பத்தி வரை, டஜன் கணக்கான தொழில்களில் கௌதம் அதானியின் பெரிய கை உள்ளது. கௌதம் அதானியின் வெற்றியின் ரகசியம் என்ன? அவரது வாழ்க்கை மற்றும் வணிக பயணம் பற்றித் தெரிந்து கொள்வோம்.

பயணம் எங்கு தொடங்கியது?

1978 இல் தனது கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு மும்பையில் உள்ள ஹீரா பஜாரில் கௌதம் அதானி தனது முயற்சியை தொடங்கினார் என்று ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்திகள் கூறுகின்றன.

சகோதரர் மூலம் கிடைத்த வாய்ப்பு

ஆனால் 1981 இல் அவரது மூத்த சகோதரர் அவரை ஆமதாபாதிற்கு அழைத்ததிலிருந்து அதானியின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கத் தொடங்கியது.

மூத்த சகோதரர் பிளாஸ்டிக் ரேப்பிங் கம்பெனி ஒன்றை வாங்கி வைத்திருந்தார். ஆனால் அதை சரியாக இயக்க முடியவில்லை.

நிறுவனத்திற்கு தேவையான மூலப்பொருளின் பற்றாக்குறை இருந்தது. இதை ஒரு வாய்ப்பாக மாற்றி அதானி, காண்ட்லா துறைமுகத்தில் பிளாஸ்டிக் துகள்களை இறக்குமதி செய்யத் தொடங்கினார்.

1988இல் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் உருவானது. இது உலோகங்கள், விவசாய பொருட்கள் மற்றும் ஜவுளி போன்ற பொருட்களின் வர்த்தகத்தை தொடங்கியது.

சில வருடங்களிலேயே இந்த நிறுவனமும், அதானியும் இந்தத் தொழிலில் பிரபலமாகிவிட்டனர்.

அதானி எண்டர்பிரைசஸ் படி, நிறுவனத்தின் பங்குகள் 1994 ஆம் ஆண்டில் BSE மற்றும் NSE இல் பட்டியலிடப்பட்டது. அப்போது ஒரு பங்கின் விலை 150 ரூபாய். ஆனால் இது ஒரு ஆரம்பம் மட்டுமே.

ஆமதாபாதில் உள்ள முந்த்ரா துறைமுகம்

படக்குறிப்பு,ஆமதாபாதில் உள்ள முந்த்ரா துறைமுகம்

முந்த்ரா துறைமுகம்

1995ஆம் ஆண்டு அதானி குழுமம் முந்த்ரா துறைமுகத்தை இயக்கத் தொடங்கியது.

8 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள அதானியின் முந்த்ரா துறைமுகம் இன்று இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுகமாக திகழ்கிறது.

முந்த்ரா துறைமுகம் இந்தியாவின் மொத்த சரக்கு இயக்கத்தில் நான்கில் ஒரு பங்கைக் கையாளுகிறது. குஜராத், மஹராஷ்டிரா, கோவா, கேரளா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு மற்றும் ஒடிஷா ஆகிய ஏழு கடலோர மாநிலங்களில் 13 உள்நாட்டு துறைமுகங்களில் அதானி குழுமத்தின் பங்கு உள்ளது.

இதில் நிலக்கரியால் இயங்கும் ஒரு பெரிய மின் நிலையம் மற்றும் ஒரு சிறப்பு பொருளாதார மண்டலமும் உள்ளது.

முந்த்ரா துறைமுகம் உலகிலேயே மிக அதிக அளவு நிலக்கரியை இறக்கும் திறன் கொண்டது. இந்த துறைமுகம் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது, அதாவது அதை இயக்கும் நிறுவனம் எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை.

இந்த மண்டலத்தில் மின் உற்பத்தி நிலையங்கள், தனியார் ரயில் பாதைகள் மற்றும் தனியார் விமான நிலையமும் உள்ளது.

அதானி

சமையல் பொருட்களின் வணிகம்

1999 ஜனவரியில் அதானி குழுமம், வில் அக்ரி பிசினஸ் குரூப் வில்மருடன் கைகோர்த்து சமையல் எண்ணெய் வணிகத்தில் நுழைந்தது. இன்று நாட்டில் மிக அதிகம் விற்பனையாகும் பார்ச்சூன் சமையல் எண்ணெயை அதானி-வில்மர் நிறுவனம் தயாரிக்கிறது.

ஃபார்ச்சூன் ஆயில் தவிர அதானி குழுமம், நுகர்பொருட்கள் துறையில் கோதுமை மாவு, அரிசி, பருப்பு வகைகள், சர்க்கரை போன்ற டஜன் கணக்கான பொருட்களை உற்பத்தி செய்கிறது.

2005 ஆம் ஆண்டில் அதானி குழுமம், இந்திய உணவுக் கழகத்துடன் இணைந்து, நாட்டில் பெரிய பெரிய தானிய சேமிப்பு கிடங்குகளை(silos)அமைக்கத்தொடங்கியது. இவற்றில் தானியங்கள் பெரிய அளவில் சேமிக்கப்படுகின்றன.

ஆரம்பத்தில் 20 ஆண்டு கால ஒப்பந்தத்தின் கீழ் அதானி குழுமம், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிலோஸ்களை கட்டியது. இந்தியா முழுவதும் உள்ள சிலோ யூனிட்களில் இருந்து விநியோக மையங்களுக்கு உணவு தானியங்களை கொண்டு செல்ல வசதியாக தனியார் ரயில் பாதைகளையும் அதானி குழுமம் உருவாக்கியது.

இன்றைய தேதியில் இந்திய உணவு கழகம் மற்றும் மத்தியப் பிரதேச அரசின் உணவு தானியங்களை அதானி அக்ரி லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட், தனது சிலோக்களில் சேமிக்கிறது.

இதில் இந்திய உணவுக் கழகத்தின் 5.75 லட்சம் மெட்ரிக் டன்களும், மத்திய பிரதேச அரசின் மூன்று லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களும் அடங்கும்.

कोयला खदान

நிலக்கரி சுரங்கம்

2010 ஆம் ஆண்டில் அதானி, ஆஸ்திரேலியாவின் லிங்க் எனர்ஜி நிறுவனத்திடமிருந்து 12,147 கோடிக்கு நிலக்கரிச் சுரங்கத்தை வாங்கினார் என்று பார்ச்சூன் இந்தியா இதழ் கூறுகிறது.

கெலி பெஸ்ட் குயின் தீவில் உள்ள இந்த சுரங்கத்தில் 7.8 பில்லியன் டன் கனிம இருப்பு உள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் 60 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்ய முடியும்.

இந்தோனேசியாவில் எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி போன்ற ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன. ஆனால் உள்கட்டமைப்பு வசதி இல்லாததால், இந்த வளங்களை போதுமான அளவு பயன்படுத்த முடியவில்லை.

2010 ஆம் ஆண்டில், அதானி குழுமம் இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ராவிலிருந்து நிலக்கரியை கொண்டு செல்ல 1.5 பில்லியன் டாலர் மூலதன முதலீட்டை அறிவித்தது. இதற்காக தெற்கு சுமத்ராவில் கட்டப்படும் ரயில் திட்டத்துக்கான ஒப்பந்தம் அங்குள்ள மாகாண அரசுடன் கையெழுத்தானது.

அப்போது இந்தத் தகவலை அளித்த இந்தோனேசியா முதலீட்டு வாரியம், அதானி குழுமம் 50 மில்லியன் டன் கொள்ளளவு கொண்ட நிலக்கரி கையாளும் துறைமுகத்தை அமைக்கும் என்றும், தெற்கு சுமத்ரா தீவின் நிலக்கரி சுரங்கங்களில் இருந்து நிலக்கரியை கொண்டுசெல்ல 250 கிமீ ரயில் பாதையை அமைக்கும் என்றும் கூறியது.

அதானி

வணிக விரிவாக்கம்

அதானி சாம்ராஜ்ஜியத்தின் விற்றுமுதல் 2002 இல் 76.5 கோடி டாலராக இருந்தது. இது 2014இல் 1000 கோடி டாலராக அதிகரித்தது.

2015-ம் ஆண்டுக்குப் பிறகு ராணுவத்துக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கும் பணியையும் அதானி குழுமம் தொடங்கியது. சிறிது காலத்திற்குப் பிறகு, இயற்கை எரிவாயு துறையில் அதன் வணிகம் விரிவடைந்தது. 2017-ல் சோலார் பிவி பேனல்கள் தயாரிக்கத் தொடங்கியது.

அதானி குழுமம் 2019 இல் விமான நிலையத் துறையில் நுழைந்தது. அகமதாபாத், லக்னெள, மங்களூரு, ஜெய்ப்பூர், குவஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ஆறு விமான நிலையங்களின் நவீனமயமாக்கல் மற்றும் இயக்கும் பொறுப்பு அதானி குழுமத்திடம் உள்ளது. அதானி குழுமம் 50 ஆண்டுகளுக்கு இந்த ஆறு விமான நிலையங்களையும் இயக்கும், நிர்வகிக்கும் மற்றும் மேம்படுத்தும்.

கெளதம் அதானி தலைமையிலான அதானி குழுமம்,மும்பை இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் நிறுவனத்தில் 74 சதவிகித பங்குகளை வைத்துள்ளது. மும்பை சர்வதேச விமான நிலையம் டெல்லிக்கு அடுத்தபடியாக நாட்டின் மிகப்பெரிய விமான நிலையம் ஆகும்.

Share

Related News