பெரும்பாலும் புவி வெப்பமயமாதலுக்கான பரவலான காரணங்களையும் அதற்கான தீர்வுகளையும் நாம் கேட்டிருப்போம். விமானப் பயணத்தை குறைக்க வேண்டும், இ-கார்களை பயன்படுத்த தொடங்க வேண்டும் போன்ற கருத்துகளை நாம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் இதுவரை பருவநிலை மாற்றத்தோடு தொடர்புடைய அதேசமயம் பெரிதும் கேள்விப்படாத ஐந்து விஷயங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம். அதில் சில உங்களுக்கு ஆச்சர்யம் அளிக்கலாம்.
ஐநாவின் தகவல்படி உலகின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் அரிசியை தங்கள் நிலையான உணவாக கருதுகிறார்கள்.
ஆனால் அரிசி என்பது சுற்றுச்சூழலுக்கு பிரச்னையான ஒரு பயிர் என்பதை உங்களால் நினைத்து பார்க்க முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.
அரிசியை விளைவிக்க நமக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. அதிகப்படியான நீர் வயலில் தேங்குவது மண்ணில் இருக்கும் மிகச்சிறிய உயிரினங்கள் மீத்தேன் வாயுவை உற்பத்தி செய்ய காரணமாகிறது. இந்த மீத்தேன் பசுமைக்குடில் வாயுக்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதர்களின் செயலால் உண்டாகும் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தில் நெல் பயிரிடுவது 1-2 சதவிதம் வரை காரணமாகிறது. அதேபோன்று பயிர் அறுவடைக்கு பின்பு காய்ந்த பயிரை எரிப்பதால் வளிமண்டலத்தில் கரியமில வாயு சேர்கிறது
நெற்பயிர் புவி வெப்பமயமாதலில் ஆற்றும் பங்கை கருத்தில் கொண்டு அதிகம் நீரை உறிஞ்சாத பல நெல் வகைகளை உருவாக்க உலகம் முழுவதும் உள்ள பல விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.