ஆப்ரிக்காவில் ஏற்பட்டுள்ள நோயான குரங்கு அம்மை நோய் தற்பொழுது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பரவி வருவதாகவும் இது குறித்து உலக நாடுகள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
குரங்கு அம்மை நோய் பிரிட்டனில் கடந்த வாரம் கண்டறியப்பட்டுள்ளது. ஆப்ரிக்காவில் இருந்து பிரிட்டன் வந்தவர்களிடம் இருந்து இந்த நோய் பரவி இருக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதை தொடர்ந்து இந்த நோய் ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் பரவியுள்ள நிலையில், 40 க்கும் மேற்பட்டோருக்கும், மாட்ரிட்டில் மட்டும் 23 பேருக்கும் இந்த குரங்கு அம்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்காவிலும் ஒருவருக்கு குரங்கு அம்மை ஏற்பட்டுள்ளது. அவர் சமீபத்தில் கனடாவில் இருந்து திரும்பியதாக கூறப்படுகிறது.
ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட இந்நோய் தற்பொழுது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பரவி வருவது குறித்து ஆராய்வு நடத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
இந்த நோயின் அறிகுறிகளாக காய்ச்சல், உடல் வலி, முகம், கை கால் மற்றும் பாதத்தில் கொப்பலங்கள் ஏற்படும் என்பதுடன், இந்த நோய் தொற்றுக்குள்ளானவர்களில் 10 சதவீதமானோர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த நோய் அதிகளவில் இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் இது பாலியல் ரீதியாக பரவ கூடிய நோயாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்டோர் பயன்படுத்திய பொருட்களை உபயோகிப்பதன் மூலம் பரவலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.