இலங்கையில் தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள இந்த தருணத்தில் செய்தித் தாள்களை அச்சிடும் கடதாசிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஊடகத் தொழில் நலிவடையும் என்பதையும் கடந்து, தொலைக்காட்சி, இணையதளம் போன்ற வசதிகள் இல்லாத பின் தங்கிய பகுதிகளில் வசிப்பவர்கள் நாட்டு நடப்பு என்ன என்பதை அறிவதற்கான வாய்ப்புகளும் பறிபோகும் என்ற அச்சம் உண்டாகியுள்ளது.
ஆனால், ஊடக நிறுவனங்கள் இத்தகைய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளதை இதுவரை தங்கள் கவனத்துக்குக் கொண்டுவரவில்லை என்று இலங்கை அரசு கூறுகிறது.
கொரோனா தொற்று, உணவுப் பொருள் பற்றாக்குறை, வேலைவாய்ப்பின்மை போன்ற பல்வேறு நெருக்கடிகளை இலங்கை ஒரு சேர சந்தித்து வரும் சூழலில், அவை குறித்த அரசின் அறிவிப்புகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்த செய்திகள் இலங்கையின் கடைசி கிராமம் வரை சென்று சேர்வதும் இதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அச்சுப் பத்திரிகையை மட்டுமே நம்பி, தகவல் அறிந்துக்கொள்ளும் கொழும்பு – கிரான்பாஸ் பகுதியைச் சேர்ந்த சிவம் சண்முகராஜா ”பேப்பரை நாளாந்தம் வாங்குவேன். வீட்டில் இருக்கும் போது, இடைக்கிடை வாசிப்பேன். எங்களுக்கு ஒன்லயின்ல எல்லாம் செய்தி பார்க்க தெரியாது. நாங்க வயசானவங்க தானே! ஒன்லயின்ல பார்க்கக்கூடிய அளவு எமக்கு சரியான தெளிவில்ல. பேப்பர்ல இருந்தா, நேரம் கிடைக்கும் போது, செய்திகள வாசிப்பேன். எங்களுக்கு பேப்பர மாதிரி எப்படியும் வராது. பேப்பர பார்த்து பழகியதால, வேறு ஒன்றுலயும் செய்தி பார்த்த புரியாது” என கூறினார்.