“ஐயோ அப்பா என்னால முடியாது! இந்த வீட்டைச் சுற்றி ஓடி எங்கட மகனைப் பிடித்து அவன்ட பல்லை தேய்ப்பதற்குள் நான் களைச்சுப் போனேன். தயவு செய்து அவனை பிடிக்க உதவுங்கோ, அவன் ஒழுங்காய் பல் தேய்ச்சு 3 நாளாச்சு”.
சிறு குழந்தைகள் உள்ள வீடுகளில் இது சாதாரணமான ஒரு நிகழ்வாகும்.
குழந்தைகளின் பற்களை துலக்குவதென்பது பெரியதொரு போராட்டமாக இருக்கிறதா? இது ஒரு பிரச்சினையை ஏற்படுத்தும் என்று அறிந்திருக்கிறீர்களா? இவற்றை எப்படி தடுக்க முடியும்?
ஒரு குழந்தையின் வாயில் பொதுவாக 9 மாதமளவில் தோன்றும் (6-12 மாதங்களுக்கிடையில்) பாற்பற்களானது அழகிய புன்னகையை தருவதுடன் மேலும் பல விடயங்களைக் கொண்டுள்ளது. சரியான போசணை, சரியான தாடை வளர்ச்சி, சரியான உச்சரிப்பு மற்றும் குழந்தையின் ஆளுமை வளர்ச்சி என்பவற்றுக்கு ஆரோக்கியமான பாற்பற்கள் மிகவும் அவசியமாகும்.
அண்மைக் காலத்து தகவல்களின் படி நம் நாட்டில் ஐந்து வயதுக்குட்பட்ட ஒவ்வொரு பத்துக் குழந்தைகளில் ஆறு பேர் பற்சிதைவால் பாதிக்கப்படுகிறார்கள். சராசரியாக ஒரு குழந்தைக்கு மூன்று பற்கள் என்ற வீதத்தில் இந்தப் பாதிப்பு ஏற்பட்டிருப்பது பற்சிதைவின் தீவிரத்தை நன்கு காட்டுகிறது. அத்துடன் அவர்களுள் 4 வீதமானோர் மட்டுமே பற்சிதைவுக்கு முறையான சிகிச்சையொன்றைப் பெற்றுக்கொண்டவச்களாக இருக்கிறார்கள்.
துரதிஸ்டமான இப்படியான நிலைமையின் பின்னணியில் இரண்டு விடயங்கள் இருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. முதலாவது, குழந்தைகளுள் 60 வீதமானவர்கள் மட்டுமே தினம் இரு தடவைகள் பல் துலக்குகிறவர்களாக காணப்படுகிறார்கள். இரண்டாவது, குழந்தைகளுள் நான்கிலொரு பகுதியினர் புளோரைட் அடங்கிய பற்பசையைப் பாவித்து பல் துலக்குவதில்லை.
‘பல் துலக்குதல்’ என்பதைக் குழந்தை தனது ஆரம்ப வயதிலிருந்தே ஓர் இன்பமான அனுபவமாகக் கொள்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
இந்தக் கட்டத்தில் திறமை வாய்ந்த குழந்தை வளர்ப்பு முறைகள் பயன்படுத்தப்பட வேண்டும். ஒரு குழந்தை மகிழ்வுடன் தனது பற்களைத் துலக்குவதற்கு அதன் முதற்பல் வாயில் முளைக்கும் வேளையில் பெற்றோராகிய நாம் அதனைத் தயார்படுத்த வேண்டும். வாயினுள் முதற்பல் முளைத்த உடனே சிறிய மென்மையான தூரிகைகளைக் கொண்ட பற்தூரிகையினால் குழந்தையின் பற்களைத் துலக்கத் தொடங்குவது மிகவும் அவசியமாகும்.
ஆரம்பத்தில் புளோரைட் பற்பசை மெல்லிய படலமொன்றை 3 வயது வரையுள்ள குழந்தைகளின் பற்தூரிகையில் தடவலாம். 3 – 6 வயதுவரை இதை பட்டாணிக் கடலையளவு படிப்படியாக அதிகரிக்கலாம். இப்படியாகத் தினமும் இரண்டு முறை குழந்தைக்கு பல்துலக்கப்படுகிறது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதாவது குழந்தை உடம்பு கழுவும் அல்லது குளிக்கும் தருணங்களில் அல்லது குழந்தை மகிழ்சிசியான மனநிலையில் இருக்கும் எந்த வேளையிலாயினும் பல்துலக்குவது நல்லது.
ஆரம்ப காலத்திலிருந்தே குழந்தைகள் இவ்வாறு பல்துலக்குவதற்குப் பழக்கப்படுத்திக் கொண்டால் பெற்றோரின் வற்புறுத்தல் இல்லாமலே தினமும் இரண்டு தடவைகள் பல்துலக்குவதை வழக்கமான செயலாக மாற்றிக் கொள்வார்கள்.
குழந்தைக்கு முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே கொடுப்பதினாலும் தொடர்ந்து ஒரு வயது வரை சீனி சேர்க்காத உணவு வகைகளைக் கொடுப்பதாலும் அவர்களின் இனிப்பு வகைகளுக்கான ஆவலைக் கட்டுப்படுத்த முடியும். மேலதிகமான உணவுகள் கொடுக்கத் தொடங்கும் போது சூப்பிப் போத்தலும் பதிலாக சிறிய கிண்ணமொன்றும் கரண்டியும் பாவிக்கலாம். சூடாக இருக்கும் குழந்தையின் உணவை வாயினால் ஊதிக் கொடுப்புது நல்லதல்ல, ஏனெனில் அதனூடாக நோய்க்கிருமிகள் கடத்தப்படலாம்.
மாதத்திற்கு ஒரு தடவை என்றாலும் பற்களைத் துலக்கிய பின்பு குழந்தையின் மேலுதட்டை உயர்த்தி முன்பற்கள் மற்றும் ஏனைய பற்களில் பற்சிதைவிற்கனான ஆரம்ப அறிகுறிகள் காணப்படுகின்றனவா என பொறுப்புள்ள ஒரு வயதுவந்தவர் பரிசோதிக்கலாம். இவ்வாறான பற்சிதைவு ஆரம்பத்தில் வெள்ளை நிறப் புள்ளிகளாகவும், பின்பு படடிப்படியாகப் கபில நிறமாகவும் மாறி, இறுதியில் பற்களில் குழிகளை ஏற்படுத்தும். ஆரம்பத்திலேயே கண்டறிதல், பல்வைத்தியரின் ஆலோசனையைப் பெறுதல் என்பன இந்த நிலைமைகளின் சிகிச்சையை எளிதாக்கும்.
அழகிய புன்னகை, நல்ல போசணை மற்றும் ஆளுமை கொண்ட குழந்தைகளை உலகுக்கு வழங்க இவ்வாறான எளிய வழிமுறைகள் உங்களுக்க உதவும் என்பதில் சந்தேகமேயில்லை.
#OralHealth
#brushingteeth
#toothbrushchallenge