September 30, 2023 8:56 am
adcode

எதிர்வரும் நத்தல் பண்டிகைக் காலத்தில் பயணத் தடை? குறித்து வெளியான தகவல்.

எதிர்வரும் நத்தல் பண்டிகைக் காலத்தில் பயணத் தடையை விதிக்காமல், நிலைமையை தந்திரோபாய ரீதியாக நிர்வகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், பெரும் எண்ணிக்கையில் மக்கள் திரண்டிருப்பது, மிகவும் பாதகமான சூழ்நிலையாக அமையும் என சுகாதாரத் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக மக்கள் கூட்டமாக ஒன்று கூடுவதை இயன்றளவு குறைத்துக் கொள்ளுமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், நத்தார் பண்டிகை அல்லது புத்தாண்டு காலங்களில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து இதுவரையிலும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் நேற்று முன்தினம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் பயணத் தடைகளை விதிக்காமல் பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குதல் உள்ளிட்ட தடுப்பூசி திட்டத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று முன்தினம் (13) 747 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 27 கொவிட் மரணங்களும் பதிவாகியுள்ளன.

இதற்கமைய, தற்போது 13,575 பேர்  வீடுகளிலும், வைத்தியசாலைகளிலும் மற்றும் இடைநிலை சிகிச்சை நிலையங்களிலும் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

Share

Related News