ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் செயற்பாடுகளை கட்டங்கட்டமாக ஆரம்பிப்பதற்கான முயற்சிகளில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஈடுபட்டுள்ளார்.
இதற்கமைவாக ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டி மற்றும் களஞ்சியப்படுத்தல் பிரிவினை தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் செயற்படுத்துவதற்கு கடற்றொழில் அமைச்சர் தீர்மானித்துள்ள நிலையில், அதுதொடர்பான முன்னேற்றங்களை ஆராயும் கலந்துரையாடல் நேற்று (09) நடைபெற்றது.
மாளிகாவத்தையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த துறைமுகம் பிரதேச மக்கள் பயனடையும் வகையில் செயற்படுத்தப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வாக்குறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இக் கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டதுடன், சம்மந்தப்பட்ட தனியார் முதலீட்டாளர்களும் கலந்து கொண்டனர்.