கனமழையால் தலைநகரம் சென்னை மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதுமே பரவலாக தத்தளித்து வருகிறது.
மதுரை வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து தரைப் பாலங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வருஷநாடு மற்றும் மூலவைகை ஆற்றுப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வைகை ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 66.83 அடியாக உள்ளது.
வைகை அணையில் இருந்து 569 கன அடி நீர் மதுரை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்காக திறக்கப்பட்டுள்ளதோடு கடந்த இரு நாட்களாக தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையினால் அந்த மழைநீரும் வைகை ஆற்றில் வடிந்து வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
மதுரை சிம்மக்கல் அருகே வைகை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்றின் குறுக்கே உள்ள யானைக்கல் தரைப்பாலத்தில் கனரக வாகனங்களின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தரைப்பாலத்தின் இரு பகுதிகளிலும் தற்காலிக தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசாரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர் .