உள்ளூரில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வசிக்கும் காணி அற்ற குடும்பங்களுக்கு அரச நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட காணிகளுக்கான உறுதி வழங்கும் நிகழ்வு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த ஹேரத் கலந்துகொண்டதோடு, அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் திரு.கீர்த்தி ரஞ்சித் அபேசிறிவர்த்தன, வட மாகாண பிரதம செயலாளர் திரு.சமன் பந்துல சேன ஆகியோரும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.
இதன் போது கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கு அமைவாக காணி அற்ற 186 குடும்பங்களுக்கு அரச நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட காணிகளுக்கான உறுதிகள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இது தொடர்பாக பலதடவைகள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகவும், வட மாகாண சுகாதார தொண்டர்களின் நியமனம் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பாக சாதகமாக பரிசீலித்து வருவதாகவும் கடற்றொழில் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், வடக்கு கிழக்கு மாகாண மக்களின் பிரச்சனைகளை கருத்திற்கொண்டு இவ் நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ள உறுதுணையளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இதன்போது நன்றிகளை தெரிவித்தார்.