இந்தியாவில் இருந்து வீசும் காற்றின் திசை மாறியதன் காரணமாக இலங்கையில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் (NBRO) சுற்றாடல் பிரிவின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி இன்று தெரிவித்தார். நேற்று காற்றின் தரம் 150-200 என்ற அளவில் பதிவாகியிருந்ததாகவும், ஆனால் இன்றைய நிலவரப்படி காற்றின் தரம் வெகுவாக மேம்பட்டுள்ளதாகவும் பிரேமசிறி கூறினார். காற்றின் தரம் இன்று முன்னேற்றம் கண்டுள்ள போதிலும், வெளியில் செல்லும்போது முகமூடிகளை அணியுமாறு பிரேமசிறி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கையின் காற்றின் தரம் இன்று கணிசமான அளவில் முன்னேற்றம் கண்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும், காற்றின் தரமானது தூசியின் பிரசன்னத்தை வெளிப்படுத்துவதாக அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க எச்சரித்துள்ளதுடன், இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நல்ல காற்றின் தரம் 0-50 க்கு இடையில் இருக்கும் என்று கூறிய டாக்டர் ஜாசிங்க, அந்த அளவுகள் பதிவு செய்யப்படும் வரை தேவையான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். சுவாசக் கோளாறு உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மற்றவர்களும் விழிப்புடன் இருக்குமாறு அவர் குறிப்பாக அறிவுறுத்தினார்.
