கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரான் குறித்து உலகம் அச்சப்படக் கூடாது, மாறாக அதை எதிர்கொள்ள தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
ஓராண்டு காலத்துக்கு முன்பு இருந்ததை விட, தற்போதைய சூழல் மாறிவிட்டது என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 3ஆம் தேதி) ஒரு கூட்டத்தில் பேசியபோது கூறினார்.
ஒமிக்ரான் திரிபு கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அதிக பிறழ்வுகளைக் கொண்ட கொரோனா திரிபு அதிவேகமாகப் பரவக் கூடியதா அல்லது கொரோனா தடுப்பூசிகள் கொடுக்கும் பாதுகாப்பு அம்சங்களைக் கடக்கக் கூடியதா என இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ஒமிக்ரான் திரிபு முதலில் கண்டுபிடிக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் வழங்கியுள்ள தரவுகளின்படி, புதிய ஒமிக்ரான் திரிபு, கொரோனா நோயெதிர்ப்பைக் கடந்து மனிதர்களை பாதிக்கலாம்; இருப்பினும் இந்த பகுப்பாய்வுகள் இறுதியானதல்ல என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
தென்னாப்பிரிக்காவில் இருந்து வெளியான தரவுகளை மேற்கோள் காட்டி, ஒமிக்ரான் திரிபு அதிவேகமாக பரவக் கூடியது, இத்திரிபு உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தும் திரிபாக மாறலாம் எனவும் ராய்டர்ஸ் செய்தி முகமையின் நெக்ஸ்ட் மாநாட்டில் கூறினார் உலக சுகாதார அமைப்பின் முக்கிய விஞ்ஞானிகளில் ஒருவரான செளமியா சுவாமிநாதன். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் 99 சதவீதத்தினர் டெல்டா திரிபால்தான் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“நாம் எச்சரிக்கையாகவும், தயாராகவும் இருக்க வேண்டும், அச்சப்படக் கூடாது. காரணம் ஓராண்டு காலத்துக்கு முன்பிருந்த சூழலை விட, தற்போது நாம் மாறுபட்ட சூழலில் இருக்கிறோம்’ என்றார் அவர்.