கொழும்பில் கொண்டாடப்படும் இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக பொது மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹர்த்தாலின் ஒரு பகுதியாக யாழ்.நகரிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
இதேவேளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு பல்கலைக்கழகம் வரை நான்கு நாள் கறுப்புக் கொடி அணிவகுப்புப் பேரணியை முன்னெடுத்துள்ளனர்.
இன்று யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பிக்கும் நடைபயணம் பெப்ரவரி 7ஆம் திகதி மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை சென்றடைவதாகவும், அங்கு வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி அறிக்கை வெளியிடவுள்ளதாக Daily FT நாளிதழ் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் நடத்தும் இந்த எதிர்ப்புப் பேரணியில் காணாமல் போனவர்களின் குடும்பங்கள், இந்து மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள், தமிழ் சிவில் சமூகக் குழுக்கள், தமிழ் பெண்கள் குழுக்கள், தமிழ் தொழிற்சங்கங்கள், தமிழ் விவசாயிகள் மற்றும் மீனவர் அமைப்புகள் மற்றும் பலர் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.