September 26, 2023 9:59 pm
adcode

சர்வதேச மகளிர் தினம் – 2022

சர்வதேச மகளிர் தினம் இன்றாகும். வருடம் தோறும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த (2022) வருடம் ‘அவள் ஒரு நாடு, ஒரு தேசம், ஒரு உலகம்’ எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றோம்.

1975 ஆம் ஆண்டு இந்த நாளை சர்வதேசப் பெண்கள் தினமாக ஐ.நா. அங்கீகரித்தது. ஆனால், ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இந்த நாள் பெண்களுக்கு முக்கிய நாளாக உலகின் பல பகுதிகளில் இருந்து வருகிறது.

தாயாக, தாரமாக, அக்கா தங்கையாக, மகளாக, தோழியாக நம் உறவின் அனைத்து நிலையிலும் நிறைந்திருக்கிறார்கள் பெண்கள். எப்போதுமே உடலால் வலிமை மிக்க ஆண்களை விட மன வலிமை நிறைந்த பெண்கள் சிறப்பு மிக்கவர்களே.

அரசியல், சமூக செயல்பாடுகள், பொழுதுபோக்கு, விளையாட்டு, தொழில்துறை என சகல துறைகளிலும் இன்று பெண்கள் இல்லாத இடங்களே இல்லை. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வது வெறும் பழமொழிக்காக மட்டும்மல்ல. ஆண்கள் துவண்டு போகும் நேரங்களில் தாங்கி பிடித்து நேர்மறை எண்ணங்களை ஆண்கள் மனதில் விதைத்து மீண்டும் வாழ்க்கை என்னும் பந்தயத்தில் முன்பை விட பலமடங்கு வேகத்தில் ஓட வைப்பதில் பெண்களின் பங்கு அதிகம் என்று சொன்னால் மிகையாகாது.

இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சர்வதேசப் பெண்கள் தினம் எப்படித் தோன்றியது? என்று நோக்கினால் நிச்சயமாக கொண்டாட்டத்தில் அல்ல போராட்டத்தில்தான் அது தொடங்கியது. அமெரிக்கத் தொழிற்சங்க இயக்கத்துக்கும், ரஷ்யப் புரட்சி இயக்கத்துக்கும் இதில் பங்கு உண்டு.

வேலை நேரத்தை குறைக்கவும், கூலியை உயர்த்தவும் வலியுறுத்தி, வாக்களிக்கும் உரிமை கோரி 15,000 உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1908 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி ஒரு பேரணியை நடத்தினர். இந்த நாளை அடுத்த ஆண்டு தேசிய பெண்கள் தினமாக அறிவித்தது அமெரிக்க சோஷியலிஸ்ட் கட்சி.

இந்த நாளினை சர்வதேச தினமாக அனுசரிக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைத்தவர் கிளாரா ஜெட்கின். கோபன்ஹேகனில் 1910 ஆம் ஆண்டு நடந்த உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில் இந்த யோசனையை முன்வைத்தார் கிளாரா. அந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து 1911 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதை அடிப்டையாகக் கொண்டே 2011 ஆம் ஆண்டு நூறாவது சர்வதேசப் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. எனவே, அந்த வகையில் இது 111 வது பெண்கள் தினமாகும்.

எனினும் 1975 ஆம்; ஆண்டில்தான் ஐ.நா. மார்ச் 8-ஐ சர்வதேசப் பெண்கள் தினமாக முறைப்படி அறிவித்து கொண்டாடத் தொடங்கியது. அத்துடன் ஒவ்வோர் ஆண்டின் பெண்கள் தினத்துக்கும் ஒரு தொனிப்பொருளை முன்வைத்துவருகிறது ஐ.நா. இதன்படி ஐ.நா. அறிவிப்புக்குப் பின் வந்த முதல் பெண்கள் தினத்தின் முழக்கம் ‘சமத்துவத்தை யோசி, அறிவுபூர்வமாக கட்டியெழுப்பு, மாற்றத்துக்காக புதுமையாக சிந்தி’ என்பதாகும்.

உழைக்கும் வயதில் உள்ள பெண்களில் சரிபாதி பேர்தான் உலக தொழிலாளர் தொகையில் இடம் பெற்றுள்ளார்கள் என்கின்றன ஐ.நா. புள்ளி விவரங்கள்.

இதேவேளை இலங்கையின் யுத்த காலத்தில் முகமாலையில் உள்ள மிகப்பெரிய கண்ணி வெடிக் களத்தில் புதைந்து கிடக்கும் வெடிகளை அகற்றும் ஆபத்தான பணியிலும் எம் பெண்கள் ஈடுபட்டுள்ளமை போற்றுதலுக்குரிய விடயமே.

Share

Related News