ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிக்களுக்காக தென் சூடானிலுள்ள சிறிமெட் தரம் – 2 வைத்தியசாலையில் பணியாற்றுவதற்கான இலங்கை இராணுவ வைத்திய படையின் 8 வது குழு புறப்படுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்னதாக 24.12.2021 காலை பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு வேரஹேரஇலங்கை இராணுவ வைத்திய படையணியின் தலைமையக அணிவகுப்பு மைதாத்தில் மரியாதை செலுத்தினர்.
இதன்போது இலங்கை இராணுவ வைத்திய படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் துஷித ஹெட்டியராச்சி அவர்களால் பிரதம அதிதியாக பங்கேற்ற இராணுவ தளபதியவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டதோடு, சிப்பாய்களினால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
அதனையடுத்து இலங்கை இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் கிரிஷாந்த பெர்ராண்டோ பிரதம அதிதியவர்களுக்கு சம்பிரதாயபூர்வமான வரவேற்பளித்து அணிவகுப்பு மைதானத்திற்கு அழைத்துச் சென்றார். பின்னர் அணிவகுப்பு கட்டளை அதிகாரியினால் பிரதம அதிதியிடம் அறிக்கையிடல் மற்றும் அணிவகுப்பு மரியாதையின் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு அனுமதி கோரப்பட்டது.
குழு தளபதி லெப்டினன்ட் கேணல் என்.எம் நிஃப்லர் மற்றும் இரண்டாம் கட்டளை அதிகாரி மேஜர் டி.வை.எஸ் குமார தலைமையில் 8 வது தென் சூடானுக்கு செல்லும் குழுவில் 4 மருத்துவ நிபுணர்கள் மற்றும் 13 அதிகாரிகள் உட்பட 66 இராணுவ வீரர்கள் உள்ளனர். குழுவில் விடுதி தலைமை தாதியர், அவசர சிகிச்சை தாதியர் (மகளிர் மருத்துவம்), சத்திர சிகிச்சைக் கூட தொழிநுட்பவியலாளர்கள், பிசியோதெரபிஸ்ட்கள் (டிபிஎம்), ரேடியோகிராஃபர், எக்ஸ்ரே தொழிநுட்பவியலாளர்கள், ரேடியலஜிஸ்ட், பல் மருத்துவர் மற்றும் பல் உதவியாளர், பல் டெக்னீசியன், மெடிக்கல் களஞ்சிய பொறுப்பாளர்கள், பார்மசிஸ்ட், பார்மசி தொழிநுட்பவியலாளர்கள் ஆகியோர் அடங்குவர். , ஆய்வக தொழிநுட்பவியலாளர்கள், தகவல் தொடர்பு தொழிநுட்பவியலாளர்கள், சுகாதார உதவியாளர், நிர்வாக எழுதுவினைஞர், சமையல்காரர்கள், ஆம்புலன்ஸ் சாரதிகள், சுகாதாரப் பணியாளர்கள், பிரேத அறை உதவியாளர், என இலங்கை இராணுவ மருத்துவப் படையைச் சேர்ந்த 40 பேரும் இலங்கை சமிக்ஞைப் படையின் இருவரும் (02), பொறியியலாளர் சேவைப் படையின் இருவரும் (02), இலங்கை மின் மற்றும் இயந்திர பொறியியல் படையின் நால்வரும் (04) மற்றும் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் ஒருவரும் ஆவர்.
மேற்படி குழுவினர் முழுமையான பொறுப்புக்களை ஏற்கவுள்ளதை குறிக்கும் வகையில் இலங்கையின் தேசிய கொடி, இராணுவ கொடி, ஐக்கிய நாடுகளின் கொடி மற்றும் இலங்கை இராணுவ வைத்திய படையணியின் கொடி என்பன சம்பிரதாயங்களுக்கு அமைவாக இராணுவ தளபதியவர்களால் அணிவகுப்பிற்கு வழங்கி வைக்கப்பட்டது.
அணிவகுப்பின் நிறைவில் சகலருக்கும் வாழ்த்துக்களை கூறிக்கொண்ட தளபதியவர்கள் நாட்டிற்கு பெருமையையும் கௌரவத்தையும் சேர்க்க வேண்டும் என அறிவுரைத்ததோடு, வெளிநாடுகளில் பணியாற்றுவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் எடுத்துரைத்தார். அதேநேரம் தென் சூடானில் பணியாற்றுகின்ற வேளையில் பின்னபற்ற வேண்டிய ஒழுக்கம் மற்றும் அவர்களிடம் இருக்க வேண்டிய அர்ப்பணிப்பு தொடர்பிலும் எடுத்துரைத்தார்.
ஏற்கனவே தென் சூடானில் ஐ.நா அமைதிகாப்பு பணிகளுக்காக சென்றிருக்கும் 7வது இலங்கைக் குழு, ஐ.நாவின் விதிமுறைகளுக்கு இணங்க தமது சேவைக்காலம் முடிந்தவுடன் விரைவில் நாடு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மேற்படி நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு, முதன்மை பொதுப்பணி அதிகாரிகள், பணிப்பாளர்கள், இலங்கை இராணுவ வைத்திய படையின் சிரேஷ்ட அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.
ஐநா பொதுச் செயலாளரின் பிரதிநிதிகள் தலைமையில் தென்சூடான் நாட்டில் மேற்படி அமைதிகாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, கலவரத்தினால் சவால்களை எதிர்கொண்டிருக்கும் தென் சூடான் நாட்டில் இராணுவ வீரர்கள் பொலிஸார் மற்றும் சிவில் பணியாளர்கள் அடங்கிய ஆயிரக் கணக்கிலான குழுவினர் நீள நிற தலைக் கவசங்களுடன் நிலை நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதேநேரம், இலங்கை இராணுவம் ஐநாவின் வேண்டுகோளுக்கிணங்க 2014 ஆம் ஆண்டில் தென் சூடானில் போர் சூழல் நிலவும் பகுதிகளில் சிறிமெடன் 2 ஆம் நிலை மருத்துவமனையை நிறுவியது.