March 28, 2023 1:57 pm
adcode

சீனாவின் கடன் பொறியில் சிக்கியுள்ளதா இலங்கை?

ராஜிய உறவு உலகில் அண்மை காலமாக அதிகம் பேசப்படும் ஒரு விடயமாக ”சீன கடன் பொறி” காணப்படுகின்றது. ”சீனாவின் கடன் பொறியில்” இலங்கை சிக்கியுள்ளதாக பல காலமாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இலங்கை மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சீனா, கடனை வழங்கி அந்நாடுகளின் பொருளாதார மையங்களை சீனா கையகப்படுத்துவதாக மேற்குலக நாடுகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன.

இந்த குற்றச்சாட்டுக்களை கொழும்பிலுள்ள சீன தூதரகம் நிராகரித்து, மாறுப்பட்ட பதிலொன்றை வழங்கியது.

”மேற்குலக நாடுகளின் கடன் பொறியிலிருந்து” இலங்கையை சீனாவே காப்பாற்றி வருவதாக சீன தூதரகம் பதிலளித்தது.

இலங்கைக்கு மாத்திரமன்றி, ஆப்பிரிக்க வளையத்திலுள்ள சில நாடுகளின் துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்கள் பலவற்றுக்கான கடனை சீனாவே வழங்கியுள்ளது.

”யுகாண்டாவை மூழ்கடித்த சீன கடன் பொறி, இலங்கையையும் மூழ்கடிக்கின்றது” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.

”சீனாவினால் வழங்கப்பட்ட கடனை மீளச் செலுத்த முடியாமையினால், யுகாண்டாவிலுள்ள ஒரேயொரு சர்வதேச விமான நிலையம் தற்போது அவர்களுக்கு இல்லாது போயுள்ளதாக, ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டுக்குள் பிரவேசிக்கும் ஒரேயொரு மற்றும் பிரதான நுழைவுவாயில், வேறொரு நாட்டிற்கு உரித்தாகின்றமையானது, யுகாண்டா மக்களுக்கு எந்தளவிற்கு பிரச்சனையான அனுபவமாக இருக்கும்?” என ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார்.

”ராஜபக்ஷ ஆட்சியை போன்றே, யுகாண்டாவின் ஊழல் மிகுந்த அரசியல் தலைமைகளின் முன்னுரிமைகள் மற்றும் தேசிய திட்டமொன்று இல்லாது கமிஷன்களை பெற்றுக்கொள்வதற்காக பேராசையுடன் சீனாவிடமிருந்து பெருமளவிலான தொகை கடனை பெற்றுக்கொண்ட திமிர்பிடித்த முடிவின் பெறும்பேறு இது” என அவரது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”ராஜிய ரீதியிலான விவகார வரையறைகளுக்கான எல்லையிலிருந்து அப்பால் சென்று, வேறொரு நாட்டின் ”அரசியல் மற்றும் இராணுவ அபிலாஷைகளுக்காக” அந்த முகாமில் இணைவதன் ஊடாக, தமது சொந்த நாட்டின் இறையாண்மையை இழப்பதானது, நாட்டின் தேசிய அபிலாஷைகளை நேரடியாகவே அழிப்பதாகும்” என சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு பதிலாக, நாட்டிற்கு தேவையற்ற திட்டமாக நிர்மாணிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகம், இந்து சமுத்திரத்தின் கடற்படை வழித்தடமாக சீனாவினால் கையகப்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

”சீனாவின் கடற்படை தளமாகவே, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட QUAD நாடுகள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அவதானித்து வருகின்றன. இது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய பிரச்சினை. முட்டாள் தனமான முடிவுகளின் விளைவாக, எதிர்வரும் 60 – 80 மாதங்களில் பிராந்தியத்தில் தவிர்க்க முடியாத அதிகார போராட்டத்தில் தவிர்க்க முடியாத விளைவுகளை அனுபவிப்போம்” என, பீல்ட் மார்ஷல் கூறுகின்றார்.

”உரம் ஏற்றிய கப்பல் விவகாரத்தில், சூடுபட்ட பன்றியை போல இலங்கையிலுள்ள சீன தூதரகம் போராடி வருகின்றது. இவ்வாறான சூழலில், எவ்வாறு நடந்துகொள்வது என்பது தற்போது எமக்கு மிகத் தெளிவாக தெரிகின்றது. எதிர்வரும் காலங்களில் இந்த விவகாரத்தை சரி செய்துக்கொள்ள வேண்டும்” என அவர் தனது பதில் தெரிவித்துள்ளார்.

Share

Related News