டிசம்பர் மாதத்தில் இலங்கையில் சுற்றுலா வலயங்களுக்கு விசேட மின்வெட்டுத் திட்டங்களை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன் மூலம் தென் மாகாணம் மற்றும் எல்ல சுற்றுலா வலயங்களுக்கு டிசம்பர் 1ஆம் திகதி முதல் இரவு வேளையில் 1 மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பகலில் 1 மணித்தியாலமும், இரவில் 1 மணித்தியாலம் 20 நிமிடமும் அமுல்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டு எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி வரை தொடரும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நோரோச்சோலை அனல்மின் நிலையத்தின் 3ஆம் அலகு, எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி திட்டமிட்டபடி தேசிய மின்தொகுப்புடன் இணைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் சுற்றுலா அமைச்சினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள அனைத்து சுற்றுலா வலயங்களுக்கும் இரவு நேர மின்வெட்டுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.
இதனால் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் இரவு நேர மின்வெட்டு 1 மணித்தியாலமாக குறைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.