September 30, 2023 8:49 am
adcode

ஜனவரி முதல் வாகன ஓட்டிகளுக்கு மருத்துவ சோதனை

பல்வேறு போதைப்பொருட்களை உட்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டறியும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார். இதற்காக சுமார் 5000 போதைப்பொருள் பரிசோதனை சாதனங்கள் பொலிஸாருக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மேல் மாகாணத்தில் கொக்கெய்ன் மற்றும் ஹெரோயின் போன்ற போதைப் பொருட்களை உட்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டறியும் நடவடிக்கையை ஆரம்பிக்க உள்ளோம் என அவர் தெரிவித்தார். போதைப்பொருள் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்த லசந்த அழகியவன்ன, இது சாரதிகளுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.

 

“முன்னர், போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய மருத்துவப் பரிசோதனைகள் தேவைப்பட்டன. இருப்பினும், இந்த புதிய கருவி மூலம், அந்த இடத்திலேயே சோதனை நடத்தி, இதுபோன்ற ஓட்டுனர்களை கண்டறிய முடியும்,” என்றார். போதைப்பொருள் பாவனை காரணமாக ஏறக்குறைய 400 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

Share

Related News