அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் நடத்தை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
தனுஷ்க குணதிலக்கவுக்கு தொழில்முறை கிரிக்கெட் அல்லது வேறு எந்த விளையாட்டிலும் பங்குபற்றுவதற்கு பூரண தடை விதிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கு சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திரு.சஞ்சய் ராஜரத்தினம் பணிப்புரை விடுத்துள்ளார்.
T20 உலகக் கோப்பை கிரிக்கட் தொடரின் போது இலங்கை கிரிக்கெட் அணியின் நடத்தை தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி சரோஜனி குசலா வீரவர்தன தலைமையிலான குழு வழங்கிய அறிக்கையின் உள்ளடக்கங்களை ஆராய்ந்தே சட்டமா அதிபர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். .
இந்த விஜயத்தின் போது ஒழுக்கமற்ற செயற்பாடுகளில் ஈடுபட்ட ஏனைய கிரிக்கெட் வீரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் பரிந்துரைகள் அடங்கிய இரண்டு பக்க கடிதம், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி சுமதி தர்மவர்தன மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மனோகர ஜயசிங்க ஆகியோரின் கையொப்பத்துடன் நேற்று வெள்ளிக்கிழமை விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.