தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று நடைபெறவுள்ளது.
பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
காலை 9.30ற்கு பரீட்சை ஆரம்பமாகும். எனவே அரை மணி நேரத்திற்கு முன்னர் சகல பரீட்சார்த்திகளும் பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளிக்க வேண்டும். இதேவேளை, மாணவர்களை அழைத்து வருபவர்களும் சுகாதார வழிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டுமென பரீட்சைகள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொவிட் தொற்றுக்கு இலக்கான அல்லது தனிமைப்படுத்தப்பட்ட பரீட்சார்த்திகளும் பரீட்சையில் தோற்றுவதற்கான விசேட ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.எல்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
இம்முறை 3 இலட்சத்து 40 ஆயிரத்து 508 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 943 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, 496 பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.. கொவிட் தொற்றுக்கு இலக்கான பரீட்சார்த்திகளுக்காக 108 விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.