September 26, 2023 9:30 pm
adcode

தாமஸ் ஆல்வா எடிசன் ஒலிப்பதிவு கருவியைக் கண்டுபிடித்து, அதில் ரைம்ஸ் பாடிய நிகழ்வின் வரலாறு

“1879-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதியன்று மாலை, நியூ ஜெர்சியில் அமைந்திருந்த ஒரு சிறிய கிராமத்திற்கு, ரயில்களில் மக்கள் கூட்டமாக வந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த புதிய கருவியைக் கண்டு பிரமிக்க அவர்கள் அங்குச் சென்று கொண்டிருந்தார்கள்.

அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 1877-ஆம் ஆண்டு ஃபோனோக்ராஃப் என்ற பேசும் கருவியை அவர் கண்டுபிடித்து மக்களை பிரமிக்க வைத்திருந்தார். அதைப் போலவே, இந்த முறை வீடு, அலுவலகம் மற்றும் பள்ளிகளில் பயன்படுத்தக் கூடிய மின் விளக்கைக் கண்டுபிடித்திருந்தார்.”

1996-ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக பதிப்பகம் வெளியிட்ட “தாமஸ் ஆல்வா எடிசன்: இன்வென்டிங் தி எலெக்ட்ரிக் ஏஜ்” என்ற நூலில் அதன் ஆசிரியர் ஜீன் எடெய்ர் இப்படிக் குறிப்பிட்டிருப்பார்.

ஃபோனோக்ராஃப் என்ற கருவியை தாமஸ் ஆல்வா எடிசன், தந்தி மற்றும் தொலைபேசி ஆகிய இரண்டு கருவிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியின்போது கண்டுபிடித்தார்.

ரைம்ஸ் பாடிய எடிசன்

1877-ஆம் ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதியில் வெளியான சயின்டிஃபிக் அமெரிக்கன் இதழ், “மிஸ்டர் தாமஸ் ஏ.எடிசன் சமீபத்தில் இந்த அலுவலகத்திற்குள் வந்து, மேசையின் மீது ஓர் இயந்திரத்தை வைத்து, இயக்கினார். அது, எங்கள் உடல்நலத்தை விசாரித்துவிட்டு, ஃபோனோக்ராஃப் பிடித்துள்ளதா என்று கேட்டுவிட்டு குட் நைட் சொன்னது,” என்று கூறியது.

ஒலியைப் பதிவு செய்து மீண்டும் ஒலிக்கக்கூடிய அந்தக் கருவியைக் கண்டுபிடித்ததற்காக, எடிசனுக்கு 1878, பிப்ரவரி 19-ஆம் தேதியன்று அமெரிக்கா காப்புரிமை வழங்கியது.

1877-ஆம் ஆண்டில், காகித டேப்களில் தகவல்களைப் பதிவு செய்து அவற்றை தந்தி வழியாகப் பரிமாற்றிக் கொள்ளும் இயந்திரத்தைக் கண்டறியும் முயற்சியில் இருந்தார் என்று காங்கிரஸ் நூலகத்தின் (Library of Congress) பதிவுகள் கூறுகின்றன. அந்த முயற்சி அவரை ஒலியைப் பதிவு செய்யவும் பிறகு மீண்டும் ஒலிக்க வைக்கவுமான ஒரு கருவியைக் கண்டுபிடிக்கத் தூண்டியது.

எடிசனிடம் ஒலி குறித்த பிரமிப்பு இருந்தது. ஒவ்வோர் ஒலியும் தனித்துவமான வடிவத்தை உருவாக்குவது குறித்த அவருக்கு முந்தைய ஆய்வுகள் அவருடைய ஆர்வத்தை ஒலியின் பக்கமாகத் தள்ளின.

அதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பாக, பிரெஞ்சு கண்டுபிடிப்பாளரான லியான் ஸ்காட் என்பவர், ஃபோனாட்டோக்ராஃப் (Phonautograph) என்ற ஒலியைப் பதிவு செய்வதற்கான ஒரு கருவியைக் கண்டுபிடித்திருந்தார். அதன் அடிப்படையில் தான் எடிசன் ஃபோனோக்ராஃபை கண்டுபிடித்ததாக ஜீன் எடெய்ர் தன்னுடைய நூலில் குறிப்பிட்டிருந்தார்.

எடிசன் தன்னுடைய கண்டுபிடிப்படை வடிவமைத்த பிறகு, அவருடைய இயந்திர மெக்கானிக்கான ஜான் க்ரூஸியிடம், அவருடைய உருவகப் படங்களைக் கொடுத்தார். ஜான் க்ரூஸி, அந்த உருவகப் படங்களை வைத்துக்கொண்டு, 30 மணிநேரங்களில் தயாரித்து முடித்ததாக காங்கிரஸ் நூலகப் பதிவுகள் கூறுகின்றன.

ஒலிப்பதிவு கருவியைக் கண்டுபிடித்து, அதில் ரைம்ஸ் பாடிய எடிசன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஃபோனோக்ராஃப் என்ற அந்தக் கருவி தயாரானதும் எடிசன் உடனடியாக அதைப் பரிசோதிக்க விரும்பினார். அதில் வாய் வைத்துப் பேசுவதற்காக அமைக்கப்பட்டிருந்த குழலில், “மேரி ஹேட் அ லிட்டில் லேம்ப்” என்ற ரைம்ஸ் பாடலைப் பாடினார். அதைப் பதிவு செய்துகொண்ட அந்தக் கருவி அதைத் திரும்பவும் பாடியது.

க்ராமாஃபோனுக்கு வித்திட்ட மெல்லிய வட்டத் தகடு

காப்புரிமை வாங்கியவர், 1878-ஆம் ஆண்டில் எடிசன் ஸ்பீக்கிங் ஃபோனோக்ராஃப் என்ற நிறுவனத்தின் மூலம் விற்கவும் தொடங்கினார். அவருடைய அந்தக் கருவி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், அதை வல்லுநர்களே இயக்க முடியும் மற்றும் அதில் பயன்படுத்தப்பட்ட வெள்ளீயப் படலம் (tin foil) சில ஒலிப்பதிவுகளுக்கு மட்டுமே தாக்குப் பிடிக்கும் என்பது போன்ற சில பாதகங்களும் இருந்தன.

நார்த் அமெரிக்கன் ரிவ்யூ என்ற இதழில் ஜூன் 1878 எழுதிய எடிசன், இந்தக் கருவியில் எதிர்காலப் பயன்பாடுகளுக்கான சாத்தியக்கூறுகள் பற்றிப் பேசினார். கடிதம் எழுதுவது, பார்வையற்றவர்களுக்காக நூல்களை வாசித்துக் காட்டுவது, இசைப் பெட்டியாகச் செயல்படுவது, துல்லியமான உச்சரிப்புகளோடு மொழியைப் பாதுகாத்து வைப்பது, ஆசிரியர்களின் விளக்கங்களைப் பதிவு செய்து வைத்து கல்விக்கு உதவுவது போன்றவை அவற்றில் சில.

பின்னர், காலப்போக்கில் அவருடைய அந்தக் கண்டுபிடிப்பு மீதான மக்களின் ஆர்வம் குறையவே, அவரும் மேற்கொண்டு ஃபோனோக்ராஃப் மீது அதிக நேரத்தைச் செலவழிக்காமல், மின் விளக்கைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியதாக காங்கிரஸ் நூலகப் பதிவுகள் கூறுகின்றன.

அதன்பிறகு, 1890-களில் ஜெர்மன் கண்டுபிடிப்பாளரான எமிலி பெர்லினெர், இதே கருவியில் சிலிண்டர் பயன்பாட்டிற்குப் பதிலாக மெல்லிய வட்டத் தகடு பயன்படுத்தி, ஒலி அலைக்கற்றைகளைப் பயன்படுத்தி ஒலிப்பதிவு செய்து மீண்டும் ஒலிக்க வைக்கும் முறையைக் கண்டுபிடித்தார். அதுவே பின்னர், 20-ஆம் நூற்றாண்டில் க்ராமாஃபோன் என்ற பெயரில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.

Share

Related News