October 2, 2023 10:38 pm
adcode

தாய் தந்தையின் கஷ்ட நஷ்டங்களை பிள்ளைகள் அறிந்திருத்தல் அவசியம்!

செல்வங்களில் பெரிய செல்வம் குழந்தைச் செல்வம் என்பார்கள், தமது குழந்தைகளின் பிள்ளைகளின் நினைவாகவே இரவுபகலாக தாய்தந்தையர் சொந்த ஆசாபாசங்கள் தேவைகள் மறந்து உழைத்துக் களைத்து அர்ப்பணங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தாம் கடந்து வந்த பாதையில் எதிர்கொண்ட கஷ்ட நஷ்டங்கள், துன்ப துயரங்களை வலிகளை தமது பிள்ளைகள் எதிர்கொள்ளக் கூடாது என எண்ணுகிறார்கள், அவர்கள் மீதுள்ள அன்பும் பாசமும் கரிசனையும் எல்லைகள் அற்றது என்பதனால் தான் அவர்கள்மீதும் அவ்வாறே கருணை கொள்ளுமாறு அல்லாஹ்வை வேண்டுமாறு பிள்ளைகளை அல்குர்ஆனும் ஸுன்னாஹ்வும் வலியுறுத்துகின்றன.

பிள்ளைகள் தம்மைவிட அறிவிலும் கல்வியிலும் தொழில் அந்தஸ்த்து வசதிவாய்ப்புகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக தமது சொந்த வாழ்வையே தொலைத்து விடுகின்ற தாய்தந்தையரை நாம் பார்க்கின்றோம்.

இங்குதான் அதிகமான தாய்தந்தையர் தவறிழைத்து விடுகிறார்கள், தாம் கடந்து வந்த பாதை வலிகள் பற்றி பிள்ளைகள் அறியாமல் அவர்களுக்கு சகல செளகரியங்களையும் வழங்கி கஷ்டநஷ்டங்களே புரியாதவர்களாக வாழச்செய்து விடுகிறார்கள்.

அவர்களும் மனிதர்கள், நாளை அவர்களும் வாழ்வின் சவால்களுக்கு முகம் கொடுக்க கற்றுக் கொள்ள வேண்டும், அவர்களும் பருவவயதில் பொறுப்புக்களை சுமக்க கற்றுக் கொள்ள வேண்டும், அவர்களது வாழ்வை அவர்கள் வாழ வேண்டும் என்று சிந்திக்கத் தவறிவிடுகின்றனர்.

பிள்ளைகளுக்கு உரியவயதில் சிறந்த கல்வியை கொடுப்பது, அவர்களுக்கு அடிப்படை சன்மார்க்க விடயங்களை கற்றுக் கொடுப்பது, நல் ஒழுக்கமும் பண்பாடும் உள்ளவர்களாக அவர்களை வளர்பதற்கு அப்பால் பருவ வயதை அடையும் பொழுது  அவர்களது பொறுப்புக்கள் கடமைகளை உணர்த்துவதும் தமது கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுக்க கற்றுக் கொடுப்பதும் பெற்றார்கள் கடமையாகும்.

பாலர் வகுப்பு முடிந்தால், பாடசாலை வாழ்வு, சாதாரண தரம் முடிந்தால் உயர்தரம், உயர்தரம் முடிந்தால் பல்கலைக் கழகம், இல்லாவிட்டால் ஏதாவது ஒரு கற்கை என அவர்கள் படிக்கிறார்கள், அவர்களுக்கு கையிற்கும் காலுக்கும் அனைத்தையும் பார்த்துக் கேட்டு செய்வதோடு அவர்களுக்கு சிறிய சிறிய அன்றாட வீட்டு வேலைகளை, குடும்பத் தொழில்களைக் கூட சொல்லிக் கொடுக்காமல் பங்கெடுக்கச் செய்யாமல் விட்டுவிடுகிறோம்.

சில பெற்றார்கள் அவர்களது எதிர்கால வாழ்வையும் தாமாகவே வாழ முயற்சிப்பதால் பரம்பரைக்காகவும் சொத்து சேர்ப்பதில்  தமது வாழ்க்கையை தொலைத்து விட்டு தள்ளாத வயதில் தாங்கிப்பிடிக்க யாருமின்றி தவிப்பதையும் நாம் பார்க்கத்தான் செய்கிறோம்.

கடல்கடந்து உழைக்கும் பலர் தமது மகன் மகள் கேட்கும் ஸ்மாராட் போன்களை  பைக்குகளை, விதவிதமான ஆடைகள், பாதணிகளை வாங்கி அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் கற்கைகள் என்ற பெயரில் கேட்கும் பொழுதெல்லாம்  காசை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள், காலை நாட்சா இரண்டு, ஐந்து ரியால் திர்ஹம்களில்  முடித்துக் கொண்டு அரைவயிறும் குறைவயிறும் அல்சருமாக அவர்கள் அங்குபடும் அவஸ்தைகளை பதின்ம வயதிலும் இங்குள்ள பிள்ளைகள் அறிய மாட்டார்கள்.

பிள்ளைகளை அவர்கள் பாட்டிற்கு விட்டு விட்டு தகாத உறவுகள் தீய நட்புக்கள், கெட்ட பழக்கங்கள், புகைத்தல், மது பாவனைகள், போதைவஸ்த்து பாவனைகள் என அவர்கள் நெறிபிரழ்ந்து செல்வதற்கு பல பெற்றார்கள் தாமாகவே காரணமாகிவிட்டு  கடைசி காலத்தில் கைசேதப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

Share

Related News