தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்க பிரவேசிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், அதற்கான பாடநெறிகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளது.
ஆங்கில மொழி மூல விஞ்ஞான பாடநெறிக்கு ஆண்டுதோறும் இருபது மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர், ஆனால் இம்முறை ஒரு மாணவர் மட்டுமே தகுதி பெற்றுள்ளார்.
ஆங்கில மொழி மூல கணிதப் பாட நெறிக்கு 45 மாணவர்களைத் தெரிவு செய்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த போதிலும், இம்முறை 29 பேரே தகுதி பெற்றுள்ளனர்.
நில்வலா கல்வியியற் கல்லூரியில் விஞ்ஞான பாடநெறிக்கு 73 மாணவர்கள் தெரிவு செய்யப்படவேண்டிய நிலையில், எட்டு மாணவர்களே இம்முறை தகுதிபெறவுள்ளனர். கணித பாட நெறிக்குகு 65 மாணவர்கள் தெரிவு செய்யப்படவேண்டிய நிலையில், இம்முறை 12 பேர் மாத்திரமே தகுதி பெற்றுள்ளனர்.
அத்துடன், புலதிசிபுர கல்வியியற் கல்லூரியின், விவசாய கற்கைநெறிக்கு 60 மாணவர்கள் சேர்க்கப்படவேண்டிய போதிலும் இவ்வருடம் 36 பேர் மாத்திரமே தகுதிபெற்றுள்ளனர். சியானே கல்வியியல் கல்லூரிக்கு ஆங்கில பாடநெறிக்கு 45 மாணவர்கள் தெரிவு செய்யப்படவேண்டியுள்ள நிலையில் இவ்வருடம் 29 பேர் மாத்திரமே தகுதி பெற்றுள்ளனர்.
இதேவேளை, ஆறு நேர்முகப்பரீட்சைகளை மேற்கொண்ட பின்னரும் இந்த பாடநெறிகளுக்கு முழுமையாக மாணவர்களை சேர்த்துக் கொள்ள முடியவில்லை .
இம்முறை உள்வாங்கப்படவுள்ள மாணவர்கள் 2018 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் என்பதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்த வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறாத மாணவர்கள் பாடநெறிகளுக்கு சென்றுள்ளதனால், கல்வியற் கல்லூரிகளுக்கு மாணவர்கள் குறைந்துள்ளனர். இவ்வாறு மாணவர்களின் வீழ்ச்சியானது எதிர்வரும் 3 வருடங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.