எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தமது வீட்டுத் தோட்டங்களில் ஏதேனும் ஒரு விவசாய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு இலங்கை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, இன்று நடந்த ஊடகச் சந்திப்பு ஒன்றின் மூலம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பு ஓரளவு வரவேற்பைப் பெற்றிருந்தாலும் இது நிரந்தரமான மற்றும் முழுமையான தீர்வுகளைத் தருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
வீட்டில் போதுமான அளவுக்கு விளைவிக்க முடியாத அரிசி, தானியங்கள் உள்ளிட்டவற்றுக்கு இலங்கையில் இப்போது கடுமையான தட்டுப்பாடு உள்ளது. வீட்டிலேயே வளர்க்கக்கூடிய மரக்கறிகளுக்கான விதைகள் கிடைப்பதும் தற்போதைய சூழலில் அனைவருக்கும் எளிதாக இல்லை.
என்ன சொன்னார் அமைச்சர்?
நாடு முழுவதும் உடனடியாக விவசாய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன, அனைத்து வீட்டுத் தோட்டங்களிலும் மிளகாய், கத்தரிக்காய், கீரை வகைகள் போன்ற குறுகிய காலத்தில் பயன் தரக்கூடிய விவசாயத்தை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இரண்டாவது உலகப் போரின் போது, இவ்வாறான பாரிய சிக்கல்கள் இல்லாத போதிலும், பாரிய உணவுப் பஞ்சம் ஏற்பட்டதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.
இலங்கையில் எதிர்வரும் ஆண்டு பாரிய உணவு பஞ்சம் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக பல்வேறு தரப்பினரும் அச்சம் வெளியிட்டு வருகின்ற நிலையிலேயே, அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு கூறியுள்ளார்.

எனினும், எதிர்வரும் ஆண்டு எந்த விதத்திலும் உணவுப் பஞ்சம் ஏற்படாது என தான் உறுதியாகக் கூறுவதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார்.