நிரந்தர நியமனம் கிடைக்காத பயிற்சி பட்டதாரிகள் தமது நியமனம் குறித்து கவலைக்கொள்ள வேண்டாம் என அரச நிர்வாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஒரு வருட கால பயிற்சியை பூர்த்தி செய்த அனைத்து பட்டதாரிகளுக்கும் நிச்சயம் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என குறிப்பிட்ட அவர், அனைத்து அரச சேவை வரலாற்றில், ஒரே முறையில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பட்டதாரிகள் ,அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்று கூறினார்.
பயிற்சி பட்டதாரிகளுக்கான நியமனம் தொடர்பில் விளக்கம் அளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (05) அமைச்சில் இடம்பெற்றது. பயிற்சியை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கு 31,000 ரூபாவிற்கு மேற்பட்ட அடிப்படை மற்றும் கொடுப்பனவுடன் 41,000 ரூபாவுக்கு மேற்பட்ட சம்பளத்தை இவர்கள் இந்த வருடம் தொடக்கம் பெற்றுக்கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.
53 ஆயிரம் பட்டதாரி பயிற்சியாளர்கள் 3 பிரிவுகளின் கீழ் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். இவர்களின் 1 வருட பயிற்சி காலம் முதல்படி நிலையின் கீழ் நிறைவடைகின்றது. இவர்கள் அனைவருக்கும் நிரந்தர நியமனம் கிடைக்கவில்லை என பிரச்சினைக்குள்ளாக வேண்டியதில்லை. பயிற்சி நிறைவடைந்த பின்னர் அனைவருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று இந்த நிகழ்வில் கலந்துக்கொண்ட அரச நிர்வாக மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரத்னசிரி கூறினார்.
2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் பயிற்சிக்கான நியமனத்தை பெற்றவர்களுக்கு தற்போது நிரந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 2020 பெப்ரவரி மாதம் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு முறையாக சம்பந்தப்பட்ட மாதங்களில் நிரந்த நியமனம் வழங்கப்படும் என்றும் செயலாளர் சுட்டிக்காட்டினார்.