சில ஆண்டுகளுக்கு முன், ஈலோன் மஸ்கின் விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் ஏவப்பட்ட ராக்கெட் ஒன்று நிலவில் மோதி வெடிக்க உள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு ‘தி ஃபால்கன் 9 பூஸ்டர்’ ராக்கெட் ஏவப்பட்டது. அந்த ராக்கெட் தன் பணியை நிறைவு செய்துவிட்டு பூமிக்குத் திரும்ப போதுமான எரிபொருள் இல்லாத காரணத்தால் புவிக்குத் திரும்பவில்லை. அப்படியே விண்வெளியில் கைவிடப்பட்டது.
ஒரு ராக்கெட் கட்டுப்பாடின்றி நிலவில் மோத உள்ளது இதுவே முதல் முறை என விண்வெளி ஆய்வாளரான ஜோனதன் மெக்டோவல் கூறினார்.
நிலவில் ராக்கெட் மோதுவதால் ஏற்படும் தாக்கம் சிறிதாகவே இருக்கும் என்றும் அவர் கூறினார்.
ஒரு வானிலை செயற்கைக் கோளை, 10 லட்சம் மைல் தொலைவுக்குப் பயணித்து நிலை நிறுத்திவிட்டு, புவிக்குத் திரும்ப முடியாத ஃபால்கன் 9 ராக்கெட் ஏழு ஆண்டுகளுக்கு முன் கைவிடப்பட்டது.
இந்த விண்வெளிப் பயணம், ஈலோன் மஸ்கின் விண்வெளி ஆய்வுத் திட்டத்தின் ஓர் அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. மனிதர்கள் விண்வெளியில் வாழும் குறிக்கோளைச் சாத்தியமாக்க, ஈலோன் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் என்கிற நிறுவனத்தை நிறுவியுள்ளார்.