எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மின்வெட்டு நேரத்தை குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க, இந்த வார இறுதியில் இருந்து மின்வெட்டு நேரத்தை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஒரு தொகை டீசல் கடந்த வாரம் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும் அதற்கான பணம் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் ஜனக ரத்நாயக்க கூறியதோடு,வெள்ளிக்கிழமை (8) வரை திட்டமிடப்பட்டுள்ள ஆறரை மணி நேர மின்வெட்டு நேரத்தில் எவ்வித மாற்றம் இல்லை எனவும் கூறினார்.
எனினும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மக்களுக்கு உதவுவதே ஆணைக்குழுவின் முக்கிய நோக்கமாகும். மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் ஒருவர் இல்லாதது பெரும் கவலை அளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
தற்போதைய மின்சார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டியிருப்பதாகவும், எரிபொருள் தட்டுப்பாடுக்கு அரசாங்கத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் என நம்புவதாகவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க மேலும் கூறினார்.
– அரசாங்க தகவல் திணைக்களம்