பல்கலைக்கழக முதலாமாண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் விரைவில் ஆராயுமாறும், சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அவர்கள் அறிவுறுத்தினார்.
அத்துடன், கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக, பாடசாலை மாணவர்களின் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், அது தொடர்பில் அவதானம் செலுத்தி, கல்விப் பொதுத் தராதர சாதாரணதரம் மற்றும் உயர்தரங்களுக்கான பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான சுகாதாரப் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில், பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தி, கல்வி நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு, ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று (29) முற்பகல் இடம்பெற்ற கொவிட் தொற்றொழிப்புச் செயலணிக் கூட்டத்தின் போதே, ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றலின் முன்னேற்றம் தொடர்பிலும், ஜனாதிபதி அவர்கள் இதன்போது ஆராய்ந்தறிந்தார்.
தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க, கொரோனா சட்டதிட்டங்களில் வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளதென்று சுட்டிக்காட்டிய சுகாதார அதிகாரிகள், இது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.