உலகின் பெரும்பகுதியில், புரதம் நிறைந்த உணவுகளான பூச்சிகள் ஆசையாக உண்ணப்படுகின்றன. நம்மில் சிலருக்கு அது ஏன் அருவருப்பைத் தருகிறது?
க்ரிக்கெட் பூச்சிகளாலான பர்கர், மீல் புழுக்கள் கலந்து செய்யப்பட்ட ஃப்ரைட் ரைஸ் ஆகிய உணவுகளை எந்தவித வித்தியாசமும் இன்றி உண்பதற்குக் கொஞ்சம் பழக்கப்படவேண்டியிருக்கும். ஆனால் இப்போதைக்கு இது உங்களுக்கு அருவருப்பைத் தந்தாலும், நமது உணவில் இது எதிர்காலத்தில் முக்கியப் பங்கு வகிக்கலாம். சில ஆராய்ச்சியாளர்கள் இது முக்கியப் பங்கு வகிக்கவேண்டும் என்றுகூட சொல்கிறார்கள்.
மேலைநாடுகள் பூச்சிகளை உண்பதை நினைத்து அருவருப்பு கொள்ளலாம். ஆனால் உலகின் பல பகுதிகளில் பூச்சி உணவுகள் வழக்கமானவையாக இருக்கின்றன. ஆசியா, தென்னமெரிக்கா, ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பல நாடுகளில் 2000 வகை பூச்சிகள் உண்ணப்படுகின்றன. தாய்லாந்தின் சந்தைகளில் வறுத்த வெட்டுக்கிளிகள் விற்கப்படுகின்றன. ஜப்பானில் குளவிகளின் லார்வாப் புழுக்களை உயிருடன் சாப்பிடும் வழக்கம் உண்டு.
ஆனாலும் ஐரோப்பாவின் நுகர்வோர் அமைப்பு நடத்திய ஓர் ஆய்வில், 10% ஐரோப்பியர்கள் மட்டுமே இறைச்சிக்கு பதிலாக பூச்சிகளை சாப்பிடத் தயாராக இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
“நமது உணவு அமைப்பில் இருந்திருக்கவேண்டிய, முக்கியமான உணவுப்பொருள் என்பது பூச்சிதான். அவை சூப்பர் உணவுகள். சத்துகள் நிரம்பியவை. சிறு அளவாக இருந்தாலும் அவற்றிலிருந்து அதிகமான ஊட்டச்சத்து கிடைக்கிறது” என்கிறார் பேட்டா ஹாட்சின் இயக்குநர் விர்ஜினியா எமரி. ஸ்டார்ட் அப் நிறுவனமான பேட்டா ஹாட்ச், மீல் புழுக்களிலிருந்து கால்நடைத் தீவனங்களை உருவாக்கி வருகிறது.