ஒரு குறிப்பிட்ட நோய்க்கு எதிராக உடலில் தடுப்பூசி செலுத்தப்பட்டால், அந்த நோய் கிருமிக்கு எதிராக போரிட தடுப்பு மருந்து உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பயிற்றுவிக்கும்.
சில நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட தவணைகளில் அதாவது ஒன்றுக்கும் மேலான டோஸ் தடுப்பு மருந்தை செலுத்தி கொள்ள வேண்டியிருக்கும். கொரோனா தடுப்பு மருந்தின் முழு (இரண்டு) டோஸ்கள் மூலம் கிடைத்த நோய் எதிர்ப்பு ஆற்றல் காலப்போக்கில் குறையும் பொழுது, மேலும் நோய் எதிர்ப்புத் திறனை உடலில் அதிகரிப்பதற்காக பூஸ்டர் தடுப்பு மருந்து செலுத்தப்படுகிறது.
பொதுவாக முதல் தவணை அல்லது முதல் இரண்டு தவணைகளில் உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றல் குறையும் பொழுது பூஸ்டர் டோஸ் தடுப்பு மருந்து செலுத்தப்படுகிறது.
இதன் மூலம் உடலில் நீண்ட காலம் நோய் எதிர்ப்பாற்றல் உண்டாகிறது. இந்தியாவில் இந்த ஊக்குவிப்பு முன்னெச்சரிக்கை என்று அழைக்கப்படுகிறது.
அடுத்தடுத்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதை பிபிசியின் சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர் ஜேம்ஸ் கல்லேகர் இவ்வாறு விவரிக்கிறார்.
”முதல் டோஸ் தடுப்பு மருந்து என்பது ஆரம்பப் பள்ளியைப் போன்றது. அங்கு நீங்கள் எழுதப் படிக்க கற்றுக் கொள்வீர்கள்; அங்குதான் நமக்கு பல பாடங்களின் அடிப்படை அறிவு கிடைக்கும். ஆனால் அது போதாது என்பதால் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி கல்லூரி பல்கலைக்கழகம் என்று மேற்கொண்டு படிக்கிறோம். இதுபோல தான் அடுத்தடுத்த டோஸ் தடுப்பு மருந்தும்,” என்று விவரிக்கிறார் ஜேம்ஸ் கல்லேகர்.