March 24, 2023 5:12 am
adcode

யுக்ரேனில் இருந்து குடிமக்களை வெளியேறச் சொல்லும் மேற்கு நாடுகள்!?

யுக்ரேன் நாட்டின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு எப்போது வேண்டுமென்றாலும் நடக்கலாம் என்பதை எச்சரிக்கும் விதமாக பத்துக்கும் மேற்பட்ட மேற்கத்திய நாடுகள் தங்கள் குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு எச்சரித்துள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை யுக்ரேனில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ள நாடுகளில் அடக்கம்.

ஆஸ்திரேலியா, இத்தாலி, இஸ்ரேல், நெதர்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு குடிமக்களை யுக்ரேன்னை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளன. சிலர், தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரையும் வெளியேற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா யுக்ரேன் எல்லையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்துள்ளது என்றாலும், படையெடுப்பதற்கான எந்த நோக்கமும் இல்லை என்று மறுத்து வருகின்றது.இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசியபோது, யுக்ரேன் மீது படையெடுப்பு நடந்தால் அதன் விளைவு மிகவும் மோசமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.

படையெடுப்பதற்கான எச்சரிக்கைகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது. இந்த எச்சரிக்கையால் ஏற்படக்கூடிய பயம்தான் எதிரிகளுக்கு தேவையாக கருதப்படுகிறது. இதற்கான நகர்வுகளாகத்தான் எல்லாம் நடந்து வருகிறது, என யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.யுக்ரேன் மீது எந்த நேரத்திலும் படையெடுப்பு நடக்கலாம் என்றும், வான்வழி குண்டுவீச்சுடன் அது தொடங்கலாம் என்றும் வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது. ரஷ்யா,‌ இத்தகைய குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே பரப்பப்படுகிறது என குற்றச்சாட்டை மறுத்துள்ளது.யுக்ரேனின் தலைநகர் கீவ்வில், அமெரிக்க தூதரகத்தில் உள்ள அத்தியாவசியமற்ற ஊழியர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது, மேலும் ஞாயிற்றுக்கிழமை முதல் தூதரக சேவைகளை தற்காலிகமாக நிறுத்த உள்ளனர். இருப்பினும் “அவசர நிலையில் தொடர்பு கெள்ள “, மேற்கு நகரமான லிவிவ்வில் ‘சிறிய அளவில் தூதரக அலுவல்கள் நடக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கனடா தனது தூதரக ஊழியர்களையும் போலந்து எல்லைக்கு அருகில் உள்ள லிவிவ் நகருக்கு மாற்றுவதாக கனடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யுக்ரேனுக்கான பிரிட்டன் தூதர் மெலிண்டா சிம்மன்ஸ், அவரும் ஒரு “முக்கிய குழுவும்” யுக்ரேனின் தலைநகர் கீவ்வில் உள்ளதாக ட்வீட் செய்துள்ளார்.மற்ற நாடுகளை போல ரஷ்யாவும் யுக்ரேனில் உள்ள தங்கள் தூதரக அதிகாரிகள் இடத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. இது சம்பந்தமாக அவர்கள் கூறுகையில் தற்போது யுக்ரேனில் ஏற்பட்டுள்ள பதற்றத்தின் அடிப்படையில் பாதுகாப்புக்காக சில மாற்றங்களை செய்து உள்ளோம். மேலும் யுக்ரேன் மற்றும் பிற நாடுகளால் தூதரக அதிகாரிகளுக்கு எந்தவித பிரச்னையும் வரக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுத்ததாக ரஷ்யா தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுக்ரேனிய வீரர்களுக்கு பயிற்சி அளித்து வந்த சுமார் 150 அமெரிக்க வீரர்களை அந்நாட்டு அரசு திருப்பி அழைத்துள்ளது. மேலும், டச்சு விமான நிறுவனமான KLM, யுக்ரேனுக்கு சேவையை நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளது, இது உடனடியாக அமலுக்கு வருவதாக டச்சு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.யுக்ரேன் அதிபர் கூறுகையில், “வர இருக்கும் படையெடுப்பிற்கான உறுதியான ஆதாரம் மேற்கத்திய நாடுகளிடம் இருந்தால், அப்படியான ஆதாரத்தை நான் இன்னும் பார்க்கவில்லை”, என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “படையெடுப்புக்கான பல்வேறு செய்திகள் ஊடகங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. ஆனால் யுக்ரேன் மீது ரஷ்யா நிச்சயம் படையெடுக்கும் என்ற உறுதிப்படுத்தப்பட்ட தகவல் யாரிடமாவது இருந்தால் அதை எங்களுடன் பகிருங்கள்”, என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்

Share

Related News