ரஷ்ய ஏவுகணை தாக்குதல்கள் யுக்ரேன் முழுவதும் நகரங்கள், சிறுநகரங்கள் மற்றும் கிராமங்களை அழித்துள்ளன. கடந்த வாரம் ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு பொதுமக்கள் பகுதிகளில் ஏற்பட்ட சில அழிவுகளுக்கு முன்னரும் பின்னருமான நிலைமையை கீழுள்ள படங்கள் காட்டுகின்றன.
ரஷ்ய படைகள் யுக்ரேன் தலைநகர் கீயவில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கும் நிலையில், நகரத்தின் மீது பல கொடிய வான்வழித் தாக்குதல்கள் நடந்துள்ளன.
கீழேயுள்ள அடுக்குமாடி குடியிருப்பு கடந்த சனிக்கிழமை அதிகாலை ரஷ்ய ஏவுகணையால் தாக்கப்பட்டது.

சிறுநகரமான இர்பின், கீயவில் இருந்து வடமேற்கே 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கடந்த வாரத்தில் ரஷ்ய மற்றும் யுக்ரேனிய படைகளின் சண்டையில் முதன்மையான பகுதியாக இது இருந்தது.
பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் அப்பகுதியில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒரு தாக்குதலால் கீழேயுள்ள படத்திலிருக்கும் குடியிருப்புப் பகுதி முற்றிலும் அழிக்கப்பட்டது.

யுக்ரேனின் இரண்டாவது பெரிய நகரமான கார்ஹிவ், பல நாட்களாக ரஷ்யர்களின் தீவிர வான்வழி குண்டுவெடிப்புகளின் மையமாக உள்ளது. இதனால் அந்த நகரின் மையப் பகுதி மோசமாகச் சேதமடைந்துள்ளது.
புதன் கிழமையன்று நகரின் குடியிருப்பு மற்றும் பிற பகுதிகள் கண்மூடித்தனமாக ஷெல் குண்டுகளால், “இரவு முழுவதும் தாக்கப்பட்டதாக” யுக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர். இது சாத்தியமான போர்க் குற்றமாக ஐக்கிய நாடுகள் சபையின் வழக்கறிஞர்கள் விசாரித்து வருகின்றனர்.

கீயவில் இருந்து வடமேற்கே 60 கி.மீ தொலைவிலுள்ள போரோடியங்காவில், ரஷ்ய விமானத் தாக்குதல்கள் பல குடியிருப்பு கட்டடங்களை அழித்துள்ளன.
வியாழக் கிழமையன்று எடுக்கப்பட்ட ட்ரோன் காட்சிகள் அழிவின் அளவைக் காட்டுகிறது. கட்டடங்களின் எச்சங்கள் இன்னும் எரிந்துகொண்டிருக்கின்றன. வாகனங்கள் தெருக்களில் சிதறிக் கிடக்கின்றன.

கீயவின் வடகிழக்கில் 120 கி.மீ தொலைவிலுள்ள செர்னிஹிவ், வடக்கிலிருந்து படையெடுத்து வரும் ரஷ்ய படைகளால் சமீபத்திய நாட்களில் கடுமையான ஷெல் தாக்குதலை எதிர்கொண்டது.
பள்ளிகள் மற்றும் உயரமான அடுக்குமாடி கட்டடம் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகள் மீதான தாக்குதல்களால் 30-க்கும் மேற்பட்டோர் வியாழனன்று கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


செர்னிஹிவின் வடக்கே, அதற்கு அருகில் அமைந்துள்ள கிராமமான ரிவ்னோபிலியாவின் செயற்கைக்கோள் படங்கள், ரஷ்ய படைகளின் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து தரையில் பள்ளங்கள் ஏற்பட்டிருப்பதையும் வீடுகள் எரிந்து புகை வெளியேறுவதையும் காட்டுகிறது.

– டொமினிக் பெய்லி, மைக் ஹில்ஸ், லூசி ரோட்ஜர்ஸ் மற்றும் ஸோயி பார்தோலோமியூ