பிரிட்டனில் லஸ்ஸா காய்ச்சல் என்ற புதிய வகை வைரஸ் காய்ச்சல் மூன்று பேருக்குத் தொற்றியது கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒரு பச்சிளம் குழந்தை உயிரிழந்தது.
ஆப்பிரிக்க கண்டத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய எபோலா வைரசும் லஸ்ஸா வைரசும் உறவு முறைத் தொடர்புடையவை என்பதால் இந்த தொற்றும் உயிரிழப்பும் கவலைகளைத் தோற்றுவித்துள்ளன.
இந்த பச்சிளம் குழந்தை, கடந்த வாரம் லுடன் அன் டன்ஸ்டபிள் மருத்துவமனையில் உயிரிழந்தது. இந்த நோய்த் தொற்றிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரில் இந்த குழந்தையும் ஒன்று.
இதில் இரண்டு பேர் கேம்பிரிட்ஜ் அட்டன்புரூக் மருத்துவமனையில் முதலில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து லண்டன் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டவர்கள். இந்த இரண்டு மருத்துவமனைகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இந்த நோயாளிகளின் தொடர்பில் வந்திருக்க வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.