சுற்றுலா விசாவின் கீழ் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள அனைத்து இலங்கையர்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவித்தல் விடுத்துள்ள SLBFE தெரிவித்துள்ளது. ஓமானில் சிக்கித் தவித்து தற்போது ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் கீழ் உள்ள பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக SLBFE மேலும் தெரிவித்துள்ளது.
08 பெண்களைக் கொண்ட முதலாவது குழு 2022 டிசம்பர் 24 ஆம் திகதி இலங்கை வந்தடைந்ததாக தெரிவித்த SLBFE, 6 பெண்களைக் கொண்ட இரண்டாவது குழு இன்று நாட்டை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. சுற்றுலா விசாவின் கீழ் சட்டவிரோதமாக ஓமன் நாட்டுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்காகச் சென்ற 18 பெண்கள் தற்போது தலைமறைவாக உள்ளதாக SLBFE தெரிவித்துள்ளது. வேலை செய்யும் இடங்களை விட்டு ஓடிய பெண்கள் ஓமானின் தொழிலாளர் அமைச்சகத்தால் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று SLBFE அறிக்கை தெரிவித்துள்ளது.
அவர்களின் முதலாளிகளிடமிருந்து தேவையான அனுமதியைப் பெற்ற பின்னர் அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக SLBFE தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக ஓமானில் வசிப்பதாகக் கருதப்படும் குழுவைத் திருப்பி அனுப்புவதற்கான டிக்கெட்டுகளின் விலையை அவர்களின் தொடர்புடைய குடும்பத்தினர் ஏற்க வேண்டும் என்று அது மேலும் கூறியது.