இலங்கையின் ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) சாத்தியமான அரசியல் கூட்டணி குறித்து சூசகமாகத் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த SLPP பொதுச் செயலாளர் சாகர காரியவசம், நாட்டின் எதிர்காலம் மற்றும் இளைய தலைமுறையை மையமாகக் கொண்ட கொள்கைகளைக் கொண்ட எந்தவொரு அரசியல் கட்சிக்கும் SLPP ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். நாட்டின் மற்றும் குடிமக்களின் தேவைக்கேற்ப தமது கொள்கைகளை மாற்றிக் கொள்வதன் மூலமே அரசியல் கட்சிகள் வாழ முடியும் என தெரிவித்த காரியவசம், நாட்டின் பழமையான இடதுசாரி அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளினால் இது நிரூபணமாகியுள்ளது எனவும் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் நியமிக்கப்பட்டுள்ளமை, இரு கட்சிகளுக்கும் இடையில் பிணைப்பை ஏற்படுத்தியுள்ளதாக சாகர காரியவசம் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், இரு கட்சிகளின் கொள்கைகளிலும் சமரசம் செய்யாமல் பொருத்தமான கட்சியுடன் கூட்டணி மேற்கொள்ளப்படும் என்று அவர் வலியுறுத்தினார்.
