நாட்டிலுள்ள 18-20 வயதுக்கு இடைப்பட்ட அனைத்து இளைஞர்களுக்கும் ஆயுதமேந்திய இராணுவப் பயிற்சிகளை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய அத்துரலியே இரத்தின தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தேரர், நாட்டின் இளைஞர்களிடம் ஆளுமை இல்லை என தெரிவித்தார். “தேசத்தின் ஒழுக்கம் சீர்குலைந்துவிட்டது. இளைஞர்களிடம் ஆளுமை இல்லை. யாராவது 10 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்தால் அவர் இறந்துவிடுவார். கடலில் குளிக்க முடியாது, தென்னை மரத்தில் ஏற முடியாது. எமது நாடு தைரியமும் உறுதியும் இல்லாத தேசமாக மாறியுள்ளது” என தேரர் கூறினார்.
“பாடசாலைகளில் 350,000 பேர் உள்ளனர், அவர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்குவதில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். பாடசாலைகளில் சேர்க்கப்படுவது போல், 18-20 வயதுக்கு இடைப்பட்ட அனைவரும் ஆயுதமேந்திய ராணுவப் பயிற்சியில் சேர்க்கப்பட வேண்டும்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.