திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாக்கேணி களப்பில் கடத்து தோணி கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானமை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத் உள்ளுராட்சி மன்ற ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
உடனடியாக விசாரணை நடத்தி இந்தக் கடத்து தோணி இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டமை மற்றும் அதனை நிர்வகித்த தரப்பு பற்றிய விடயங்களை உள்ளடக்கிய விரிவான அறிக்கையொன்றை தனக்கு சமர்ப்பிக்குமாறு அவர் கேட்டுள்ளார். இது தொடர்பில் விசேட பொலிஸ் விசாரணையொன்றும் இடம்பெற்று வருகின்றது.
குறித்த சம்பவத்தினால் பாடசாலை மாணவர்கள் 04 பேர் அடங்களாக 06 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 30 வயதுடைய தாய், மகன், மகள் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
மீட்க்கப்பட்ட 18 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் காணமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மோசமான நிலைக்குள்ளான இருவர் கிளிநொச்சி மற்றும் திருகோணமலை வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
காணமல் போனவர்களை கண்டுப்பிடிக்கும் நடவடிக்கையில் 08 கடற்படை குழுக்கள் ஈடுப்பட்டுள்ளன. கடற்படையின் படகுகள் உள்ளிட்டவை இந்த நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளன.
கிண்ணியா குறிஞ்சாகேணி பாலத்தில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு நடவடிக்கை காரணமாக இந்த பாலத்தில் இழுவைப்படகு பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தின் போது இழுவைப்படகில் பாடசாலை மாணவர்கள் உள்ளடங்கலாக 25 பேர் பயணித்திருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளார்.