கோவிட்-19 தொற்று பாதிப்பு ஏற்பட்ட ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவு, விந்தணுக்களின் தரத்தில் சரிவு ஏற்பட்டதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் அந்த ஆய்வு குறித்து மருத்துவர்கள் தெரிவித்தது என்ன? விந்தணுக்கள அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? என்ன மாதிரியான உணவுகள எடுத்து கொள்ள வேண்டும்?
விந்தணு குறித்த ஆய்வு முடிவுகள் என்ன?
பெல்ஜியத்துல உள்ள ஆன்ட்வெர்பின் பல்கலைக்கழக மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர் கில்பர்ட் கிகி டாண்டர்ஸ் தலைமையில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு மீண்டுவந்த 18 முதல் 70 வயதுடைய ஆண்களிடம் இருந்து விந்தணுக்கள் தனித்தனியாக சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.
அதில், கோவிட் தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஒரு மாதம் கூட ஆகாத சூழலில் இருந்த ஆண்களிடம் எடுக்கப்பட்ட விந்தணுக்களில் பெரும்பாலானவர்களுக்கு விந்தணுக்களின் இயங்குதிறன் குறைந்திருந்தது தெரியவந்தது. அதாவது 60 சதவீத ஆண்களிடம் இயங்குதிறன் குறைவாக இருந்தது. அதே சமயம் 37% பேருக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் கோவிட் பாதிப்புக்கு பிறகு 2 மாதம் கழித்து சோதனைக்கு வந்த வேறு சில ஆண்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 28% பேருக்கு மட்டுமே இயங்குதிறன் குறைவாக இருந்ததாகவும், 6% பேருக்கு மட்டுமே விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
இந்த ஆய்வு முடிவுகள் ‘ஜெர்னல் ஆஃப் ஃபெர்டிலிடி அண்ட் ஸ்டெர்லிட்டி’ (Journal of Fertility and Sterility) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வளவு காலம் இப்படியே இந்த பிரச்னை இருக்கும்?
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விந்தணுக்கள் தரமிழப்பு, எண்ணிக்கை குறைவு போன்ற பிரச்னைகள் இருப்பது தெரியவந்ததாக ஆய்வாளர்கள் கூறினாலும், அதற்கு காரணம் சார்ஸ் கோவிட் 2 வைரஸ் தான் என்பதற்கு முழுமையான தெளிவான தொடர்பு இல்லை என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
கோவிட் தொற்று பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நாட்கள் செல்ல செல்ல விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், தரமும் கூடும் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். அதாவது விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க, குறைந்தது மூன்று மாதங்கள் ஆகலாம் என மதிப்பிடுகிறார்கள்.
ஆனால், விந்து தரத்தில் ஏற்படுற சரிவு சிலருக்கு நிரந்தரமாகி விடுகிறதா அல்லது விந்தணுக்கள் தரம் மற்றும் எண்ணிக்கை கோவிட் பாதிப்புக்கு முன் எப்படி இருந்ததோ, அப்படி பழைய நிலைக்கு திரும்ப மிகச்சரியாக எவ்வளவு காலம் எடுக்கும் என்பதையெல்லாம் உறுதிப்படுத்த மேலும் ஆய்வுகள் தேவை என தெரிவிக்கின்றனர்.
மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு விந்தணு தரம் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டாலும் அவர்களுக்கு கொரோனாவுக்கு முன் விந்தணு தரம் எப்படி இருந்தது, எண்ணிக்கை எவ்வளவு இருந்தது என்பது குறித்த விவரங்கள் தங்களிடம் இல்லை என்பதையும் அந்த ஆய்வு தெளிவுபடுத்துது.