March 24, 2023 6:06 am
adcode

சமூகத்தை அடிமையாக்கும் சமூக வலைதளங்கள்.. !!

சமூகத்தை அடிமையாக்கும் சமூக வலைதளங்கள்.. !!

 

சமூக வலைத்தளங்களின் இன்றைய வளர்ச்சியானது பல்லாயிரம் கி.மீ தொலைவிலுள்ள தொழிலாளியையும் நிர்வகிக்கும் இணைப்புப் பாலமாய் பயணிக்கின்றது என்பது மறுக்க முடியா உண்மையே. உலகில் வாழும் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் அறியாமல் வாழலாம். ஆனால் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாது எந்த மனித ஜீவனும் வாழுமா எனும் சந்தேகம் ஆய்வுகளில் எழுந்துள்ள அளவு இவ் வலைதளம் விருத்தி அடைந்துள்ளது.

 

சமூக வலைதளம் எனப் பெயர் கொண்ட அரக்கன் உலகில் உதித்ததே இணையம் என்ற பெயருடன் 1990ம் ஆண்டு காலத்தில் தான். ஆனால் அதன் அசுர வேகமோ ஆரம்பத்தில் ‘பேஸ்புக்’ ஆகவும் பின்னர் டுவிட்டராகவும் பிற்பட்ட காலங்களில் வாட்ஸ்அப், ஸ்கைப், கூகுல், மெசேஜர் என பல பெயர் கொண்டு உருமாறி பல்வேறு தொழிநுட்ப விருத்திகளுடன் இன்று உயிர்களை காவு கொள்ளும் ஓர் உயிர் கொல்லியாக மாற்றம் பெற்று விட்டது என்பது கவலைக்கிடமாகும்.

இது ஆரம்பத்தில் பொழுதுபோக்கிற்காக உருவாக்கம் பெற்றாலும் இன்று அதே வலைதளம் மனித வாழ்வில் அங்கமாக மாறி விட்டது. நேரம் கிடைக்கும் போது பயன்படுத்தப்பட வலைதளம் இன்று நேரம் கழிக்கும் இடமாக மாற காலமும் , தொழிநுட்பமும் காரணமாகி விட்டது.

 

உலகில் சுமார் 4.5 பில்லியன் மக்கள் வலைதளங்களில் உலா வருகின்றனர். அவற்றுள் சிறார்களும், இளைஞர்களுமே அதிகம் என்பது கவலைக்கிடமான விடயமாகும். வாழ்வது குடிலாக இருப்பினும் ‘ 20 ரூபா நெட் காட் தாங்களேன்’ என வாங்கிச் சென்று மாய உலகில் கனா காணும் கனவுக் கன்னிகளாக தற்கால சமூகம் மாறி விட்டது. ஏன் இந்த அளவு இவ் வலைதளம் வளர்ந்தமை என்றால் அவற்றிற்கு அளிக்கப்பட்ட பூரண மனித சுதந்திரம் எனும் உலகமாயமாக்கலாகும். இதனால் இன்று உலகம் உள்ளங்கையில் ஊசலாடும் பொம்மையாக மாறிவிட்டது.

 

இன்றைய உலகில் போதைப்பொருளாகி வரும் வலைதளம் அன்று ஆடம்பராகவும் இன்று அத்தியவசிய பொருளாகவும் மாறிவிட்டது. இவற்றிற்கு அளிக்கப்பட்ட பூரண சுதந்திரத்தால் ஆபாச படங்களையும் வீடியோ பதிவுகளையும் இட்டு சிறார் முதல் யுவதிகள் வரை மனதில் சலனத்திற்கு உள்ளாக காரணமாகி விட்டது. மேலும் தவறான தகவல்களை பரப்பி பல பெண்களை காதல் எனும் பெயர் கூறி மணப்பதுடன் பலர் மன உளைச்சல்களுக்கு உள்ளாகி தற் கொலையும் செய்ய வழிவகுத்துள்ளது.

 

அதிலும் பரிதாபம் என்னவென்றால் அலைபேசியில் அல்லாடும் ஆண்களும், பெண்களும் தன்னை சுற்றி என்ன நடக்கின்றது என்பதே மறந்து விடுகிறார்கள். அதனால் இன்று பல குடும்பங்களின் உறவுகளின் முறிவிற்கும், தன் குழந்தைகளின் வெறுப்பிற்கும், அயலார் நண்பர்களின் புரிந்துணர்வற்ற தன்மைக்கும், பெற்றோரின் எதிர்ப்பிற்கும் ஆளாகின்றனர். இதனால் குடும்பங்கள் பிரிவதுடன் அவர்களை பார்த்து வளரும் குழந்தைகளும் சிறு வயது முதலே வலைதளத்தில் விளையாடும் மழலைகளாக மாறி விடுகிறார்கள்.

 

பூரண சுதந்திரம் எனப் பெயர் கொடுத்து இன்று வலைதளம் எனும் பெயரில் பொய் முகவரி இட்டு பலரது சொந்த விடயங்களில் களவாடுவதுடன், அவர்களிடையே அவற்றினை காட்டி பணம் பறிப்பதும், பல தவறான வேலைகளை ஈடுபட வைப்பதும், வங்கி பணங்களை கூட களவாடுவது என பல உண்மைச் சம்பவங்கள் தொடர்ந்தும் தற்போது இடம் பெற்று வருகின்றன இதனால் பலர் மன உளைச்சலுக்கு உட்பட்டு வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கின்றனர் என கனடாவில் உள்ள கொலம்பியா பல்கலைகழகம் தன் ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.

 

சமூக வலைதளங்கள் உருவாக்கப்பட்டதன் முக்கிய நோக்கமே அவை தொலை தொடர்பாடலை விருத்தி செய்யும் எனும் நோக்கத்திலாகும். ஆனால் இன்றைய வலை தளங்கள் அருகில் உள்ள உறவுகளை பிரித்து விட்டு முகம் தெரிய பல உறவுகளை இணைத்து விடுகிறது. பல குடும்ப அமைப்பாய் இருந்த குடும்பங்கள் இன்று வட்சம் குழுமமாக உருமாற்றம் பெற காரணமாகி விட்டது. இன்றைய கால பிள்ளைகளை பெற்றோருடன் சிறிது நேரம் எடுத்து கூட பேச முடியாத அளவு தனக்குள்ளே முடக்கி விட்டது.

 

அதனை போன்றே சில பெற்றோர்களும் பிள்ளைகளுடன் நேரம் எடுத்து விளையாடவும் கற்பிக்கவும் நேரம் ஒதுக்காது சமூக வலைதள வசதிகளை கொடுத்து தானே தன் பிள்ளைகளுக்கு விஷத்தை ஊண்டுகின்றனர். சிறு வயது முதல் வலைதளங்களில் உலா வரும் குழந்தைகள் வலைதளம் எனும் வலையில் விழுந்து முடங்கி தன் எதிர்காலத்தையே பாழாக்கி கொள்ள வழிவகுக்கிறது.

 

வலைதளங்களில் பகிரப்படும் புகைபடங்கள், வீடியோக்கள் மூலம் உருவாகும் அறிமுகமற்ற தொடர்புகளால் தன் பெற்றோரையும் வெறுத்து தன் வாழ்வை பாழாக்கும் சமூகம் இன்று உருவாகிக் கொண்டுள்ளது. அதனை தடுக்கும் பெற்றோரை கொலை செய்வதும், அல்லது பிடிவாதத்தால் தானே தற்கொலை செய்வதுமாக பல உயிர்களை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது இன்றைய வலைதளமாகும்.

 

தற்கால இளைஞர்கள் சமூக வலைதளங்களில் மூழ்கிப் போய் இரவு பகலாக கையாள்வதால் அதிகளவான மன அழுத்தங்களுக்கும், சோர்வுக்கும், மன உளைச்சலுக்கும், ஞாபக மறதிக்கும் உள்ளாகி இறுதியில் கண் குறைபாடு, உயர் குருதி அமுக்கம், தலைவலி, இதய நோய்கள் போன்ற பல பாதிப்புக்களுக்கு உள்ளதாகுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

தொடர்பாடல் துறையில் ஏற்பட்ட முன்னேற்றமானது சமூக வலைதளங்களை கையாள வழிவகுத்தாலும் இன்று வலைதளம் உருவாக்கப்பட்ட நோக்கம் தவறி உலகமே கையினுள் எனப் பெருமிதப்படும் மனித சமூகம் தாங்களும் அவற்றிற்கு அடிமையாகி கைபேசியின் கையினுள் முடங்கிக் கிடப்பதை மறந்தே விட்டார்கள்.

 

இவ்வாறு ஏகப்பட்ட சீரழிவுகளைத் தோற்றுவித்துள்ள சமூகவலைத்தளங்கள் பல வன்முறைகளுக்கும் கூட துணை புரியக் கூடியனவாக உள்ளன. குறிப்பாக கண்டி, தெல்தெனிய, திகன வன்முறைச் சம்பவங்களுக்கு சமூக வலைத்தளங்கள் தான் அடிப்படைக் காரணமாக அமைந்தன. அதனால் இவ் வன்முறையைக் கட்டுப்பாட்டு நிலைக்குள் கொண்டு வருவதற்காக சமூகவலைத்தளங்களை சில நாட்கள் கட்டுப்படுத்த வேண்டிய நிலைமை கூட அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.

 

இவை ஒருபுறமிருக்க, மாணவர்களின் சமூகவலைத்தளப் பாவனையும் பெரிதும் அதிரித்துள்ளது. அதனால் பருவத்தை மீறிய பழக்கவழக்கங்களுக்குள் தள்ளப்படக் கூடிய அச்சுறுத்தல்களுக்கும் அவர்கள் முகம் கொடுத்துள்ளனர். குறிப்பாக அதீத கன உலகிற்குள் அவர்கள் தள்ளப்படுகின்றனர்.இது மிகவும் ஆபத்தான ஒரு நிலைமையாகும்.

 

ஆகவே தனிப்பட்ட, குடும்ப மற்றும் சமூக ஆரோக்கியத்திற்கும் நாட்டின் பாதுகாப்புக்கும் தீங்கையோ , கெடுதல்களையோ ஏற்படுத்தாத வகையில் சமூக வலைத்தளங்கள் பாவிக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும். இவ்விடயத்தில் அரசாங்கமும் சமூக ஆர்வலர்களும் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெறுகின்ற மோசடிகளையும், முறைகேடுகளையும் சீரழிவுகளையும் தவிர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

 

எம்மில் விதைகளை நட்டினால் நல்ல கனிகளை உண்ணலாம் விஷத்தினை தூவினால் விஷத்தையே பெறலாம். எனவே அடுத்து வரும் நம் தலைமுறையினருக்கு நல்ல விடயங்களை எடுத்துக் கூறி சமூக வலைதளங்களுக்கு அடிமையாகாமல் அவற்றை நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்து ஓய்வு நேரங்களை பயனுள்ளதாய் மாற்றி நம்மில் புது மாற்றம் வர பணி புரிந்து எம்மையும் இனிவரும் தலைமுறையினரையினரையினரும் பாதுகாப்போம்.

 

ஷிமா ஹரீஸ்
கலை பீடம் முதலாம் வருடம்
பேராதனை பல்கலைக்கழகம்

Share

Related News